தந்தைக்கு ஏற்பட்ட நிலை எனக்கும் வரலாம் என்று, கொலை செய்யப்பட்ட எஸ்.ஐ. மகன் வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி தொட்டிப்பாலம் தெருவைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன் பிஜிலி (60). ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளரான இவரை கடந்த 18-ம் தேதி ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்தது. விசாரணையில், ஜாகிர் உசேன் பிஜிலிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த முகமது தவுபீக் என்ற கிருஷ்ணமூர்த்திக்கும் இடையேயான இடப் பிரச்சினையில் இக்கொலை நடந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக, முகமது தவுபீக், அவரது மனைவி நூர்நிஷா, சகோதரர் கார்த்திக் மற்றும் அக்பர்ஷா ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த முகமது தவுபீக்கை, தனிப்படையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். கார்த்திக், அக்பர்ஷா ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களது உறவினரான, பிளஸ்-1 பயிலும் 16 வயது சிறுவனும் இந்த கொலை சம்பவத்தில் உடந்தையாக செயல்பட்டது தெரியவந்தது. அந்த சிறுவனைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர். இதையடுத்து, அவனைக் கைது செய்து, சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.