குன்னூர் : குன்னூர் தந்தி மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நகரில் தேங்கிய குப்பைகளை குன்னூர் காவல்துறையினர் அகற்றினர். நீலகிரி மாவட்டம் குன்னூர் தந்தி மாரியம்மன் திருவிழா ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் தொடங்கி மே மாதம் வரை 40 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டின் முக்கிய திருவிழாவான முத்து பல்லாக்கு மற்றும் புஷ்ப பல்லாக்கு நிகழ்ச்சி கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு குன்னூர் மட்டுமின்றி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர். இதனால் போக்குவரத்து செல்ல தடை விதிக்கப்பட்டது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால், குன்னூர் நகர பகுதிகளில் பல்வேறு தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டதுடன் வியாபாரம் களைகட்டியது.
இதனால் குன்னூர் நகரமே குப்பைகளால் மாசடைந்தது. இதனை தொடர்ந்து குன்னூரை தூய்மைபடுத்தும் பணியில் குன்னூர் போலீசார் களமிறங்கினர். காவல் துணை கண்காணிப்பாளர் ரவி தலைமையில், நகர காவல் ஆய்வாளர் சதீஸ் முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார், குப்பைகள் தேங்கிய முக்கிய பகுதிகளான வி.பி தெரு, மவுண் ட்ரோடு, டி.டி.கே சாலை, பேருந்து நிலையம் பகுதிகளில் குப்பைகளை சேகரித்து தூய்மைப்படுத்தும் பணிகளை மேற்கொண்டனர்.
சேகரித்த குப்பைகளை நகராட்சி குப்பை வாகனத்தில் அனுப்பி வைத்தனர். காவல்துறையினரின் இந்த சேவை பொதுமக்களின் மத்தியில் பாராட்டுகளை பெற்றது.
The post தந்தி மாரியம்மன் கோயில் விழாவில் நகரில் தேங்கிய குப்பைகளை குன்னூர் போலீசார் அகற்றினர் appeared first on Dinakaran.