தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

1 week ago 3

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள புதுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (32 வயது). இவருடைய மனைவி பிரியங்கா (29 வயது). இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஆதி லிங்கேஸ்வரன் என்ற மகன் உள்பட 3 குழந்தைகள் இருந்தனர். தினேஷ்குமார் தனது குடும்பத்துடன் கோவை வடவள்ளியில் உள்ள அண்ணாநகரில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் பிரியங்கா தனது குழந்தைகளுடன் வடவள்ளி சி.எஸ்.நகரில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்றார். அங்கு வீட்டின் அருகே குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். பிரியங்கா வீட்டுக்குள் சமையல் செய்து கொண்டு இருந்தார்.

அப்போது குழந்தை ஆதி லிங்கேஸ்வரன் திறந்த நிலையில் இருந்த தரைமட்ட தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்தான். சிறிது நேரத்திற்கு பிறகு வீட்டில் இருந்து வெளியே வந்த பிரியங்கா, குழந்தை மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தண்ணீர் தொட்டி திறந்து கிடந்ததை கண்டு சந்தேகமடைந்த அவர் தண்ணீர் தொட்டிக்குள் பார்த்தார். அப்போது குழந்தை மயங்கிய நிலையில் கிடந்தது.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article