தேனி,
வைகை அணையில் இருந்து மதுரை, சிவகங்கை மாவட்ட முதல் போக மற்றும் ஒருபோக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தின் 3-ம் பூர்வீக பாசனப்பகுதி நிலங்களுக்கு தமிழக அரசின் உத்தரவுப்படி கடந்த 10-ந்தேதி முதல் வைகை அணையில் இருந்து தண்ணீர் கூடுதலாக திறக்கப்பட்டது. அதன்படி தற்போது அணையில் இருந்து சராசரியாக வினாடிக்கு 3 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் தேனி மாவட்டத்திலும், வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கடந்த ஒருவாரமாக பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் வைகை அணைக்கான நீர்வரத்து மிகவும் குறைந்தது. அதேநேரத்தில் வைகை அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து வருகிறது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அணையின் நீர்மட்டம் 5 அடி சரிந்துள்ளது. அதாவது தற்போது அணையின் நீர்மட்டம் 60 அடியாக குறைந்துள்ளது. வைகை அணை நீர்மட்டம் சரிந்து வருவதால் 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.