
தானே,
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் சாஹிர் அலி(வயது 24). இவர் தானேவின் அம்பர்நாத் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். இந்நிலையில் அவருடைய நண்பர்களுடன் செவ்வாய் கிழமை மாலை அப்பகுதியில் உள்ள மேம்பாளத்தின் கீழ் உள்ள தண்டவாளத்தின் அருகில் நின்று குழு புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்.
இதில் சாஹிர் அலி தண்டவாளத்தில் நின்று கொண்டு செல்பி எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது பின்னால் இருந்து கொய்னா எக்ஸ்பிரஸ் ரெயில் வந்ததை அவர் கவனிக்கவில்லை. இதனால் எதிர்பாராதவிதமாக ரெயிலில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரெயில்வே போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்தானது அம்பர்நாத் மற்றும் பத்லாப்பூர் ரெயில் நிலையத்திற்கு இடையே ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த விபத்தின் காரணத்தால் ரெயில் தடங்களில் அத்துமீறி நுழைவதால் ஏற்படும் அபாயம் குறித்து போலீசார் மக்களை எச்சரித்துள்ளனர்.