சென்னை: கனமழை காரணமாக பேசின் பிரிட்ஜ் – வியாசர்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளங்களில் மழைநீர் தேங்கி இருப்பதால் நேற்று 4 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னையில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் தண்டவாளங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் சென்னை பேசின் பிரிட்ஜ் – வியாசர்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளங்களில் மழைநீர் தேங்கி இருந்ததால் நேற்று 4 ரயில்களை ரத்து செய்துள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை பேசின் பாலம் மற்றும் வியாசர்பாடி இடையேயான வழித்தடத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால் 4 ரயில்கள் ரத்து செய்யபப்ட்டுள்ளது. திருப்பதியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு புறப்பட வேண்டிய சப்தகிரி எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரலில் இருந்து ஈரோடு புறப்பட வேண்டிய ஏற்காடு எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய திருப்பதி எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய மைசூரு காவிரி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு குறுந்தகவல் அனுப்பப்பட்டது.
இதுமட்டுமன்றி சென்னையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நீலகிரி எக்ஸ்பிரஸ், கோவை செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ் சென்ட்ரலில் இருந்து புறப்படாமல் ஆவடியில் இருந்து புறப்பட்டது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். மேலும், தண்டவாளங்களில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் குறைவான வேகத்தில் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. இதனால் ரயில்கள் தாமதம் ஆகலாம். வானிலை நிலவரத்தை பொறுத்து, ரயில்கள் பகுதி நேரமாக அல்லது முழுவதுமாக ரத்து செய்யப்படலாம். பொதுமக்கள் மிகவும் அவசியமாக இருந்தால் மட்டும் பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என தெற்கு ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.
The post தண்டவாளங்களில் மழைநீர் தேக்கம் திருப்பதி, ஈரோடு, மைசூரு ரயில்கள் ரத்து: நீலகிரி, சேரன் எக்ஸ்பிரஸ் ஆவடியில் இருந்து புறப்பட்டது appeared first on Dinakaran.