தடைகளை உடைத்து, துணிந்து செல்

2 hours ago 1

தடைக் கற்களை படிக்கற்களாக எண்ணி முன்னேறி மாபெரும் சக்தியாக உருவாகி நம்மை யாராலும் நிராகரிக்க முடியாத இடத்தில் வளர்ந்து நிற்பதுதான் வெற்றி. வாழ்வில் எதிர்ப்படும் சோதனைகளைக் கடந்தால் தான் சாதனைகள் பிறக்கும். சாதிப்பது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. அதற்கு நிறைய தடை கற்களை உடைத்து வெளியே வரவேண்டும்.சாதனை படைத்த பெண்கள் பலரும் ஆரம்பக்கட்டத்தில் எல்லா பெண்களை போல ஒரு எல்லைக்குள் சாமானியமானவர்களாக தான் இருக்கின்றார்கள். ஆனால் ஒரு பெண் எப்போது சாதனையாளராக உருவாகிறாள் என்றால் தன் துறையில் முன்னேற ஒரு பெண் எதிர் கொள்கிற சவால்களும் கடந்து வருகிற தடைகளுமே அவளை மென்மேலும் வலிமையாக்குகிறது. வலிகளைத் தாங்கிக்கொண்டு வெற்றிப் பாதையை நோக்கி அயராது செல்கின்ற பெண்தான் இந்த உலகில் சாதனை பெண்ணாக திகழ்கின்றாள்.

பெண்கள் என்றால் வீட்டு வேலைகளை செய்பவராகவும், குழந்தை பெற்றுக்கொள்வராகவும் குழந்தைகளின் வீட்டுப்பாடத்தைச் சொல்லி கொடுப்பவராகவும் மட்டுமே பொதுவாகவே கருதப்படுகிறார்கள். இவற்றையெல்லாம் தாண்டி பல்வேறு துறைகளில் பெண்கள் வேலை பார்க்கும் போது தான் விமர்சனங்கள் ஏற்படுகின்றன. அதே போல் ஒரு முக்கியமான பொறுப்பைக் கையில் எடுக்கும்போதும், சவாலான ஒரு புதிய வேலையை ஏற்றுக்கொள்ளும் போதும்,அவர்கள் எதிர்கொள்ளக்கூடிய விமர்சனங்கள்தான் இந்தச் சமூகத்தின் ஒட்டு மொத்த மனோபாவமாக வெளிப்படுகிறது. ஆனால் அதையும் தாண்டி பெண்கள் வெற்றி பெறும் போது நிச்சயம் இந்த சமூகம் அத்தகைய பெண்களை கொண்டாடப்பட வேண்டும்.அப்போது தான் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் பொதுவாகவே பெண்களுக்கு ஏற்படும்.இத்தனையும் கடந்து தொழில், நிர்வாகம் மட்டுமன்றி சமூகம், இலக்கியம், கலை, அரசியல் உட்பட பல்வேறு துறைகளில் பெண்கள் தங்களை அடையாளப்படுத்தி ஜொலித்துக் கொண்டிருக்கின்றார்கள். இச்சமூகத்தின் ஒட்டுமொத்தக் கூட்டத்திலிருந்து தனித்து ஜொலித்துக் கொண்டிருக்கின்ற பெண்கள்தான் சாதனை பெண்களாக சாதித்துக் கொண்டு இருக்கிறார்கள். இதற்கு உதாரணமாய் இந்த சாதனை பெண்ணை சொல்லலாம்.

கேரளாவில் அதிக மக்கள் தொகை கொண்ட குடிசைப் பகுதிகளில் ஒன்று திருவனந்தபுரத்தில் உள்ள ராஜாஜி நகர். இப்பகுதியின் பழைய பெயர் செங்கல்சூலா காலணி. திருவனந்தபுரத்தில் தலைமைச் செயலகத்தின் பின் அமைந்துள்ளது. இப்பகுதி செங்கற்களை தயாரிப்பதற்கான மண் இப்பகுதியில் இருந்து எடுக்கப்பட்டதால் செங்கல்சூலா காலனி என மக்கள் மனதில் பதிந்து பின் ராஜாஜி நகர் என்றானது.சுமார் 12.6 ஏக்கருக்கும் மேல் பரந்து விரிந்திருக்கிறது இக்காலனி. நலத்திட்டங்களின் மூலம் மக்கள் வாழ்வில் ஏற்படப்போகும் மாற்றங்கள் என அரசு கொடுக்கும் அறிவிப்புகளுக்கும், மக்களுடைய வாழ்வின் எதார்த்த சூழலுக்கும் இடையே இருக்கும் பாரதூர வித்தியாசத்தை, கள்ளங்கபடமில்லாது பறைசாற்றிக் கொண்டிருக்கிறது இப்பகுதி.இப்பகுதியில் வசிப்பவர்தான் தனுஜா குமாரி. இவரது தந்தை மதுவுக்கு அடிமையானவர், இதனால் தனுஜாவின் குடும்பம் மிகவும் கஷ்டத்தில் இருந்துள்ளது. ஒருகட்டத்தில் குடும்பம் வறுமையின் விளிம்பில் இருந்ததால் ஒன்பதாம் வகுப்பில் பள்ளியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார் தனுஜா.

பின்னர் அவரும் அவரது சகோதரரும் ஆதரவற்ற குழந்தைகள் தங்கும் இடங்களில் வாழ நேர்ந்தது. சாதியப்பாகுபாடு, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் என பல இன்னல்களைச் சந்தித்த தனுஜா, அதே பகுதியில் வசிக்கும் சதீஷ் என்பவரை மணந்துகொண்டார். இதன்பின்னர் வாழ்வில் சற்றே மீண்டு வந்தார் தனுஜா. இவர்களுக்கு சுதீஷ், நிதீஷ் என்ற இரு மகன்கள் உள்ளனர்.வாழ்வில் பல கஷ்டங்கள் வந்தபோதும், எந்த ஒரு கஷ்டத்தையும் கொண்டு தனுஜா, உடைந்தோ முடங்கியோ போகவில்லை. தற்போது, திடக் கழிவு மேலாண்மைக்காக கேரளாவின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பின் மூலமாக தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார் தனுஜா.இளம் வயதில் இருந்தே தனுஜா புத்தகம் படிப்பது, எழுதுவது போன்றவற்றில் ஆர்வம் கொண்டவராக விளங்கினார். இந்நிலையில், தனுஜா செங்கல்சூலாவில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை தனக்காக பதிவு செய்யத் தொடங்கினார். அச்சமயத்தில்தான் (2014 ஆம் ஆண்டு) அவரின் காலனிக்கு பண்பாட்டு ஆர்வலர்கள் குழு ஒன்று வந்துள்ளது. தனுஜா குமாரியின் எழுத்தைக் கண்ட அவர்கள், எழுத்தாளர் விஜிலாவிற்கு அவரை அறிமுகம் செய்து வைத்தார்கள். தனுஜாவின் எழுத்தாற்றலை பார்த்து வியந்து போனார் விஜிலா.தனுஜாவின் அனுபவ குறிப்புகளை புத்தகமாக வெளியிடுவதில் ஊக்கப்படுத்தி உதவினார் விஜிலா. பின்தங்கிய எளிய மக்களில் ஒருவர் எழுத்தாளராக உருவாகியது சாதாரண விஷயம் அல்ல என்பதை உணர்த்திய விஜிலா, அவரது புத்தகத்தை 2014 ஆம் ஆண்டு தற்போதைய கேரள மாநில முதலமைச்சரான பினராயி விஜயன் வெளியிட உதவினார். இதையடுத்து, தனுஜா குமாரிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அதிகளவில் ஆதரவு உருவானது.

செங்கல்சூளையில் என் வாழ்க்கை எனும் தலைப்பில் வெளியான இந்நூல், தற்போது இரு பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டமாக வைக்கப்பட்டுள்ளது.கேரளாவின் மிகப்பெரிய பல்கலைக்கழகமாக விளங்கும் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில், எம்.ஏ பாடத்திட்டத்தில் ஒரு பகுதியாகவும், கண்ணூர் பல்கலைக்கழகத்தில் பி.ஏ பாடத்திட்டத்தில் ஒருபகுதியாகவும் இந்நூல் சேர்க்கப்பட்டுள்ளது.தனுஜா, தூய்மைப் பணியாளராக சேவை செய்துகொண்டு எழுத்தாளராகவும் சாதித்துக் கொண்டிருக்கிறார்.இதையறிந்த இணையதளவாசிகள்,சமூகவலைதளங்களில் தனுஜாவிற்கு தங்களின் பாராட்டுகளையும் நெஞ்சம் நிறைய வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.தனது முதல் புத்தகத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்பால், செங்கல்சூலை காலனியின் வரலாறு தொடர்பான புத்தகத்தையும் தற்போது எழுதி வருகிறாராம் தனுஜா. இதற்கிடையே சுதந்திர தினத்தன்று கேரள ஆளுநர் தனுஜா குமாரி மற்றும் அவரது குடும்பத்தினரை ராஜ்பவனுக்கு விருந்தினர்களாக அழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆளுநரைச் சந்திக்கும்போது உணர்ச்சிவசப்பட்ட தனுஜா குமாரி இதுபோன்ற தருணத்தை கனவிலும் எதிர்பார்க்கவில்லை என தெரிவித்துள்ளார். எந்த ஒரு வாய்ப்பும் வசதியும் இல்லாத பின் தங்கிய சூழலில் இருந்து தனது வாழ்க்கையை தொடங்கி பல்வேறு தடைகளை எல்லாம் தகர்த்தெறிந்து தூய்மைப் பணியாளராக இருந்து எழுத்தாளராக உருவான தனுஜாவின் வாழ்க்கை எளிய பின்புலம் உள்ள இன்றைய எத்தனையோ இளம் பெண்களுக்கு ஊக்கமூட்டும் உன்னதப் பாடம்
என்பதில் ஐயமில்லை.

The post தடைகளை உடைத்து, துணிந்து செல் appeared first on Dinakaran.

Read Entire Article