ரேஷன் கடை ஷட்டரை உடைத்து அரிசி மூட்டைகளை சூறையாடிய யானை

3 hours ago 1

சத்தியமங்கலம்: தெங்குமரஹாடாவில் ரேஷன் கடை ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்த ஒரு யானை அரிசி மூட்டைகளை சூறையாடியதால் மக்கள் பீதியில் உள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகர் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள மாயாற்றின் கரையில் நீலகிரி மாவட்ட எல்லையில் தெங்குமரஹாடா வன கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் அண்மைக்காலமாக யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே நள்ளிரவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு யானை தெங்குமரஹாடா கிராமத்திற்குள் நுழைந்தது. யானை நடமாட்டத்தை கண்ட கிராம மக்கள் அச்சமடைந்தனர். அரிசி மற்றும் பருப்பு வாசனையை நுகர்ந்த காட்டு யானை கிராமத்தில் உள்ள ரேஷன் கடை ஷட்டரை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து அரிசி மூட்டைகளை தும்பிக்கையால் சேதப்படுத்தியதோடு அரிசி மற்றும் பருப்பை சாப்பிட்டது.

இதையடுத்து அங்கு வந்த கிராம மக்கள் மற்றும் வனத்துறையினர் சத்தம் எழுப்பி காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இருப்பினும் ரேஷன் கடையில் இருந்த 3 அரிசி மூட்டைகளை காட்டு யானை சேதப்படுத்தியதால் வன கிராம மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். காட்டு யானைகள் இக்கிராமத்தில் வாழை, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்துவதோடு, கிராமத்திற்குள் நுழைந்து மனித உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் சம்பவம் அடிக்கடி நடப்பதால் யானைகள் ஊருக்குள் நுழையாமல் தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ரேஷன் கடை ஷட்டரை உடைத்து அரிசி மூட்டைகளை சூறையாடிய யானை appeared first on Dinakaran.

Read Entire Article