புதுடெல்லி: இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் நெறிமுறைகளை பூர்த்தி செய்யாத 50 மருந்துகள் தரமற்றவை என அண்மையில் அறிவிக்கப்பட்டன. இந்த 50 மருந்துகளில் பாரசிட்டமால் ஐபி 500மிகி, வைட்டமின் சி மற்றும் டி3 மாத்திரைகள், ஷெல்கால், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் சி சாப்ட்ஜெல்கள், ஆன்டிஆசிட் பேன்-டி, நீரிழிவு எதிர்ப்பு மருந்தான க்ளிமிபிரைட், உயர் ரத்த அழுத்த மருந்தான டெல்மிசார்டன் உள்ளிட்டவை அடங்கும். தரமற்றவையாக அடையாளம் காணப்பட்ட இந்த 50 மருந்துகளும் தடை செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ராஜீவ் சிங் ரகுவன்ஷி, “50 மருந்துகளும் போலியானவை என்ற தகவல் பொய்யானது. தரமற்ற மருந்துகளுக்கும், போலி மருந்துகளுக்கும் வித்தியாசம் உள்ளது.
அவற்றில் 45 மருந்துகள் தரமற்றவை. அவை தடை செய்யப்படவில்லை. தரமற்ற மருந்துகள் பற்றி உற்பத்தியாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவற்றை திரும்ப பெற உத்தரவிடப்பட்டுள்ளது. 5 மருந்துகள் மட்டுமே போலியானவை. அதுகுறித்து விற்பனையாளரிடமிருந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டத்தின்முன் நிறுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என விளக்கம் அளித்தார்.
The post தடை செய்யவில்லை தரமற்ற 45 மருந்துகளை திரும்ப பெற உத்தரவு: மருந்து ஒழுங்குமுறை ஆணையம் விளக்கம் appeared first on Dinakaran.