
சென்னை,
ஷனாயா கபூர், விக்ராந்த் மாஸ்ஸிக்கு ஜோடியாக ''ஆன்கோன் கி குஸ்டாக்கியான்'' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகி இருக்கிறார். ரஸ்கின் பாண்டின் 'தி ஐஸ் ஹேவ் இட்' சிறுகதையை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தை சந்தோஷ் சிங் இயக்கியுள்ளார்.
மான்சி பாக்லா மற்றும் வருண் பாக்லா ஆகியோர் தயாரித்துள்ள இப்படம் கடந்த 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வெளியாவதற்கு முன்பு இருந்த எதிர்பார்ப்பை பார்க்கையில், படம் பாக்ஸ் ஆபீஸில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வசூலில் தடுமாறி வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் நாளில் ரூ. 30 லட்சம் வசூலித்தநிலையில், நேற்று இரண்டாவது நாளில் ரூ. 43 லட்சம் வசூலித்ததாக கூறப்படுகிறது. இரண்டு நாட்களில் இப்படம் வெறும் ரூ. 73 லட்சம் மட்டுமே வசூலித்திருக்கிறது.
சஞ்சய் கபூர் மற்றும் மஹீப் கபூரின் மகள் ஷனாயா கபூர். இவர் முன்னதாக ''பேதடக்'' படத்தின் மூலம் அறிமுகமாகவிருந்தார், ஆனால் அந்த படம் கைவிடப்பட்டது. தற்போது ''ஆன்கோன் கி குஸ்டாக்கியான்'' மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகி இருக்கிறார்.