
சிவபெருமானை மனிதர்கள் மட்டுமின்றி பல்வேறு உயிரினங்களும் வழிபாடு செய்து பேறுபெற்ற வரலாறு உண்டு. அது மட்டுமின்றி முனிவர்கள் பல்வேறு உயிரினங்களின் வடிவங்களில் இறைவனை வழிபாடு செய்த அற்புத நிகழ்வுகளும் நடந்ததுண்டு. அப்படி பிருங்கி முனிவர் வண்டு உருவத்தில் இறைவனை வழிபட்ட தலம்தான் திருவண்டுதுறை எனப்படும் அற்புத தலமாகும். இந்த கோவில் திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் 112-வது சிவத் தலமாகும்.
பிருங்கி முனிவர் என்பவர் சிவபெருமான் மீது அளவு கடந்த பக்தி கொண்டவர். இவர் சிவனை தவிர வேறு எந்த தெய்வத்தையும் வழிபடக்கூடாது என்ற வைராக்கியத்துடன் இருந்தார். இதையறிந்த பார்வதி தேவி, அம்முனிவரின் உடலில் சக்தியாக உள்ள ரத்தம், சதை ஆகியவற்றை நீங்கச் செய்தார். உடல் தள்ளாடிய நிலையிலும் சிவனை தொடர்ந்து வழிபாடு செய்தார் முனிவர்.
முனிவருக்கு உதவ எண்ணிய சிவன், அவருக்கு மூன்றாவதாக ஒரு காலையும், கைத்தடியும் கொடுத்து அருள் புரிந்தார். பார்வதி தேவி, தானும் சிவனும் தனித்தனியாக காட்சியளிப்பதாலேயே முனிவர் சிவனை மட்டும் வழிபடுகிறார். தான் சிவனுடன் இணைந்து காட்சியளித்தால் அவர் தன்னை வழிபட்டு தானே ஆக வேண்டும் எனக் கருதி, சிவனை வழிபட்டு அவரது இடது பாகத்தைப் பெற்றார். அதன்படி சிவன் அர்த்தநாரீஸ்வரராக காட்சி அளித்தார்.
சிவனும் சக்தியும் பிரிக்க முடியாதவர்கள் என்பதை உணராத முனிவர், வண்டு உருவம் எடுத்து, அர்த்த நாரீஸ்வர திருமேனியில் ஒரு பாதியை துளைத்து கொண்டு சிவனை மட்டும் வணங்கினார். இதனால் கோபமடைந்த பார்வதி பிருங்கி முனிவரை வண்டு உருவாகவே இருக்கும்படி சாபமிட்டார். இதனால் மனம் வருந்திய முனிவர் சாப விமோசனம் வேண்டினார்.
மனம் இரங்கிய பார்வதி தேவி, "சக்தியின்றி சிவமில்லை. சிவனின்றி சக்தியில்லை. திருவண்டுதுறை தலத்தில் எங்கள் இருவரையும் இணைத்து வழிபாடு செய்து சாப விமோசனம் பெறுக" என அருள்புரிந்தார். அதன்படி பிருங்கி முனிவர் வண்டு உருவில் வழிபாடு செய்ததால் இத்தலம் "திருவண்டுதுறை" ஆனது.
திருவாரூர் மாவட்டம் வண்டுதுறை என்ற ஊரில் வண்டுறைநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது.