தஞ்சை: தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் இன்று நடந்தது. மே 7ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. தஞ்சையில் பெரிய கோயில் என்று அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோயிலுக்கு பக்தர்கள், சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். தஞ்சை பெரிய கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பெருவிழா 18 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அதன்படி இந்தாண்டு சித்திரை பெருவிழாவுக்கான பந்தல்கால் முகூர்த்தம் கடந்த மார்ச் 3ம் தேதி நடந்தது. இந்நிலையில் சித்திரை பெருவிழா கொடியேற்றம் இன்று காலை நடந்தது. இதையொட்டி சந்திரசேகரர் பஞ்சமூர்த்தி சுவாமிகளுடன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளினார்.
இதைதொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு ஆராதனை செய்யப்பட்டு 40 அடி உயர கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. பின்னர் மங்கள வாத்தியம் முழங்க கொடியேற்றப்பட்டது. முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வரும் மே 7ம் தேதி காலை நடக்கிறது. கொடியேற்ற விழாவில் அரண்மனை பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கவிதா மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.
The post தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் appeared first on Dinakaran.