சென்னை: மூலப்பத்திரம் இல்லாமல் பத்திர பதிவு செய்தால் சொத்தை இழந்து விட்டு போகும் நிலை ஏற்படும் என்பதால் அதை நடைமுறைப்படுத்தவில்லை என்று அதிமுக எம்எல்ஏ குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மூர்த்தி பதிலளித்து பேசினார். தமிழக சட்டப் பேரவையில் நேற்று வணிக வரிகள், முத்திரைத் தாள்கள் மற்றும் பத்திரப்பதிவு. போக்குவரத்து துறை ஆகிய மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு சங்ககிரி சுந்தரராஜன்( அதிமுக) பேசுகையில், ‘‘தாய் பத்திரம், மூலப் பத்திரங்கள் காணாமல் போகின்ற பட்சத்தில், மூலப் பத்திரம் இல்லையென்றால், நகல் பத்திரத்தை வைத்து செய்யலாம் என்று நீதிமன்றம் ஆர்டர் கொடுத்திருக்கிறது. நீங்களும் ஐ.ஜி மூலமாக உத்தரவு கொடுத்திருக்கிறீர்கள். ஆனால், சார்பதிவாளர் அலுவலகங்களில் மூலப் பத்திரங்கள் இல்லாமல் பத்திரங்கள் பதிவு செய்யப்படுவதில்லை’’ என்றார்.
அமைச்சர் மூர்த்தி: மூலப் பத்திரம் இல்லாமல் உங்கள் பத்திரத்தைப் பதிவு செய்து கொள்ளலாமா?. நகல் பத்திரத்தை வைக்க வேண்டும் என்றால், காவல் நிலையத்தில் மூலப் பத்திரம் காணாமல் போய்விட்டது என்று சான்றிதழ் வாங்க வேண்டும். அந்தச் சான்றிதழ்கள் வெவ்வேறு இடங்களில் வாங்குகிறார்கள் என்று தற்போது கொடுப்பதில்லை. நீதிமன்றத்துக்கு சென்று தான் உத்தரவு வாங்குகிறார்கள். மூலப் பத்திரம் இல்லாமல் சொத்துகளைப் பதிவு செய்தால், அதனுடைய விளைவுகள் என்ன என்பது தெரியும். எத்தனை பேர் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், எத்தனை பேர் சொத்தை இழந்திருக்கிறார்கள் என்பதை நீங்கள் எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.
The post மூலப்பத்திரம் இல்லாமல் பத்திர பதிவு சொத்தை இழக்கும் நிலை ஏற்படும் என்பதால் நடைமுறைப்படுத்தவில்லை: அதிமுக எம்எல்ஏ குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மூர்த்தி பதில் appeared first on Dinakaran.