புதுடெல்லி: இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 26 சதவீத வரியை விதித்திருக்கிறார் அதிபர் டொனால்ட் டிரம்ப். இந்தியா அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிகபட்ச வரி விதிப்பதாக கூறி அவர் இந்த பரஸ்பர வரியை அறிவித்தார். தற்போதைக்கு இந்த பரஸ்பர வரி 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் அமெரிக்க அரசுடன் ஒன்றிய அரசு வர்த்தக பேச்சு வார்த்தையை துவக்கியுள்ளது. இதற்காக ஒன்றிய வர்த்தக துறை கூடுதல் செயலாளர் ராஜேஷ் அகர்வால் தலைமையிலான குழு அமெரிக்காவுக்கு சென்றுள்ளது. இந்த நிலையில், இரு நாடுகளுக்கு இடையே 3 நாள் வர்த்தக பேச்சுவார்த்தை வாஷிங்டனில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்க அரசின் சார்பில் வர்த்தக துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
சுங்க வரிகள், சுங்க வரி அல்லாத தடைகள் மற்றும் சுங்க வசதிகள் உள்ளிட்ட 19 அத்தியாயங்களைக் கொண்ட ஒப்புக்கொள்ளப்பட்ட குறிப்பு விதிமுறைகளின் கீழ் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. அமெரிக்க வர்த்தக பிரதிநிதி கூறுகையில்,‘‘ இரு நாடுகளிலும் உள்ள தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கு வாய்ப்புகளை உருவாக்குவதையும், அமெரிக்க தயாரிப்புகளுக்கான சந்தை அணுகலை விரிவுபடுத்துவதையும் பேச்சுவார்த்தை நோக்கமாகக் கொண்டுள்ளன’’ என்று கூறினார். அதிகாரிகள் கூறுகையில்,‘‘ இரு நாடுகளுக்கு இடையே உள்ள வர்த்தகத்தை வரும் 2030க்குள் 500 பில்லியன் டாலராக( ரூ.43 லட்சம் கோடி)அதிகரிக்க செய்ய வேண்டும் என்ற இலக்குடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறது’’ என்றனர்.
The post டிரம்பின் பரஸ்பர வரி அறிவிப்புகளுக்கு மத்தியில் இந்தியா- அமெரிக்கா இடையே இரு தரப்பு வர்த்தக பேச்சுவார்த்தை தொடங்கியது appeared first on Dinakaran.