தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் தியாகராஜனை பணியிடம் நீக்கம் செய்து துணைவேந்தர் பொறுப்பு சங்கர் நடவடிக்கை

3 weeks ago 6

தஞ்சாவூர்: தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் தியாகராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தியாகராஜனை சஸ்பெண்ட் செய்து பொறுப்பு துணைவேந்தர் சங்கர் உத்தரவிட்டுள்ளார். தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் கடந்த 2017-18ம் ஆண்டுகளில் பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களில் 40 பேரை உரிய கல்வித்தகுதி இல்லாமல் முறைகேடாக அப்போதைய துணைவேந்தர் நியமனம் செய்தது தொடர்பாக பொது நல வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு துணைவேந்தராக திருவள்ளுவன் நியமிக்கப்பட்டார். இவர், முறைகேடாக நியமனம் செய்யப்பட்டதாக கூறப்பட்ட பேராசிரியர்களை தகுதி காண் பருவம் அடிப்படையில் நிரந்தர பணியில் அமர்த்த சிண்டிகேட்டில் ஒப்புதல் பெற்றதாக கூறப்பட்டது.

இதுகுறித்து தமிழக கவர்னர் தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டது. அப்போது, துணைவேந்தர் திருவள்ளுவன் முறையான பதில் அளிக்காததால் அவரை சஸ்பெண்ட் செய்து கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டார். மேலும் ஓய்வு பெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தவும் அவர் உத்தரவிட்டார். இதையடுத்து தொழில் மற்றும் நில அறிவியல் துறை பேராசிரியர் சங்கரை பொறுப்பு துணைவேந்தராக கவர்னர் நியமித்தார். இந்நிலையில் பேராசிரியர், பணியாளர்கள் மற்றும் மாணவர்களிடம் அசாதாரண சூழல் ஏற்படும் நிலையை உருவாக்கி வருவதாகவும், பல்கலைக்கழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொறுப்பு துணைவேந்தர் சங்கருக்கு பதிலாக, பல்கலைக்கழக ஆட்சி குழு உறுப்பினர் பாரதஜோதியை துணைவேந்தர் பணிகளை கவனிக்க பொறுப்பு பதிவாளரான தியாகராஜன் ஆணை வெளியிட்டார்.

இதற்கிடையில் ஓய்வு பெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதால், தற்போது பொறுப்பு பதிவாளராக பணியாற்றும் தியாகராஜன், விசாரணை வரம்பிற்குட்பட்டு இருப்பதாலும், நிர்வாக காரணங்களுக்காகவும் தியாகராஜனை பொறுப்பில் இருந்து நீக்கவும், அயல்நாட்டு தமிழ்க்கல்வி துறையில் இணைப்பேராசிரியராக பணியாற்றி வரும் வெற்றிச்செல்வனை மறு ஆணை பிறப்பிக்கும் வரை அல்லது நிரந்தர பதிவாளர் பணி நியமனம் செய்யும் வரை பணியாற்ற ஆணையிடுவதாக, பொறுப்பு துணைவேந்தரான சங்கர் ஒரு ஆணையை வெளியிட்டார். இப்படியாக பொறுப்பு துணைவேந்தராக உள்ள சங்கரும், பொறுப்பு பதிவாளராக உள்ள தியாகராஜனும் மாறி, மாறி ஆணை பிறப்பித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் புதிய பதிவாளராக நியமிக்கப்பட்ட இணை பேராசிரியர் வெற்றிசெல்வன் இன்று காலை 11 மணி அளவில் பதவியேற்க பல்கலைக்கழகத்துக்கு வந்தார். ஏற்கனவே மோதல் விவகாரத்தால் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதி முன்னெச்சரிக்கையாக அவர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொறுப்பேற்க பதிவாளர் அறைக்கு வந்தார். அப்போது, பதிவாளர் அறைக்கு முன்னாள் பதிவாளர் தியாகராஜன் பூட்டு போட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது தியாகராஜன் பக்கத்து அறையில் தனது ஆதரவாளர்களுடன் அமர்ந்திருந்தார். இதையடுத்து புதிய பதிவாளர் ெவற்றிசெல்வன் போலீஸ் உதவுடன் தனது ஆதரவாளர்கள் மூலம் பூட்டை உடைத்து அறைக்குள் சென்று கோப்பில் கையெழுத்திட்டு பதிவாளராக பதவியேற்று கொண்டார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

இந்நிலையில், முறைகேடாக பணியில் சேர்ந்ததாக கூறி, முன்னாள் பதிவாளர் தியாகராஜனை பணியிடை நீக்கம் செய்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் சங்கர் உத்தரவிட்டுள்ளார். தியாகராஜன், அறிவியல், தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.

The post தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் தியாகராஜனை பணியிடம் நீக்கம் செய்து துணைவேந்தர் பொறுப்பு சங்கர் நடவடிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article