உணவை ருசித்துக் கொண்டே வீட்டையும் அலங்கரிக்கலாம்!

5 hours ago 1

நன்றி குங்குமம் தோழி

‘‘இது உணவகம் மட்டுமில்லை பர்னிச்சருக்கான ரீடெயில் கடையும்தான். இங்கிருக்கும் ஒவ்வொரு அலங்காரப் பொருட்கள், சேர், மேஜை அனைத்தும் தொட்டுப் பார்த்து அதே போல் வேண்டும் என்றாலும் இல்லை வேறு மாடல் வேண்டும் என்றாலும் நாங்க செய்து கொடுப்போம்’’ என்கிறார்கள் தோழியர்களான அனிதா மற்றும் திவ்யா. இவர்களின் ‘கிரியேட் பை கிராஃப்ட்’ ஆர்கிடெக்ட் உணவகம் சென்னை நந்தனத்தில் உள்ள மெட்ரோ ரயிலின் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ளது.

‘‘நான் ஆர்கிடெக்ட் மாணவி’’ என்று பேசத் துவங்கினார் அனிதா. ‘‘படிப்பு முடிச்சதும் அந்த துறை சார்ந்த தொழிலில் ஈடுபட்டு வந்தேன். அந்த சமயத்தில்தான் நண்பர் ஒருவர் மூலம் எனக்கு திவ்யாவின் அறிமுகம் கிடைச்சது. அவர் லண்டனில் எம்.பி.ஏ முடித்தவர். சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார். அவர் உணவுப்பிரியை என்பதால் உணவு சார்ந்த தொழிலில் ஈடுபட விரும்பினார். எனக்கும் என் பர்னிச்சர்களுக்கான ரீடெயில் கடையை திறக்க வேண்டும் என்ற திட்டம் இருந்தது.

இது இரண்டையும் ஒன்றாக செயல்படுத்தினால் என்ன என்று தோன்றியது. அதன் அடிப்படையில் உருவானதுதான் ‘கிரியேட் பை கிராஃப்ட்’. இந்த ஆர்கிடெக்ட் உணவகத்தை ஒன்றரை வருடத்திற்கு முன்பு துவங்கினோம். ஆரம்பத்தில் இதில் ஆசிய உணவுகள்தான் கொடுத்து வந்தோம். தற்போது இதனை முழுமையாக மாற்றி அமைத்து புது மெனுவுடன் களம் இறங்கி இருக்கிறோம்’’ என்ற அனிதாவை தொடர்ந்தார் திவ்யா.‘‘அனிதா சொன்னது போல் எனக்கு உணவு மேல் தனிப்பட்ட ஈர்ப்புண்டு.

அது குறித்து நானும் அனிதாவும் பேசிய போதுதான் எங்களுக்கு இந்த எண்ணம் ஏற்பட்டது. ஆசிய உணவுகள் மட்டுமே வழங்கி வந்த நாங்கள் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இதில் அனைத்து விதமான உணவுகளையும் வழங்க திட்டமிட்டோம். அதற்காக எங்க ஆர்கிடெக்ட் உணவகத்தை கஃபே ஸ்டைலில் மாற்றி அமைத்துள்ளோம்.

இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடக்கூடிய அனைத்துவிதமான உணவுகளையும் வழங்கி வருகிறோம். நாம் சாப்பிடும் அன்றாட உணவுகளையே பிரத்யேக முறையில் தயாரித்து தருகிறோம். குறிப்பாக இங்கு வழங்கப்படும் உணவுகள் அனைத்தும் கம்ஃபர்ட் உணவாக இருக்க வேண்டும் என்பதால் ஒவ்வொரு உணவினையும் மிகவும் கவனமாக வடிவமைத்து இருக்கிறோம். சூப்பில் ஆரம்பித்து ஸ்டார்டர்கள், மெயின் கோர்ஸ் உணவுகள், குளிர்பானங்கள், டெசர்ட் என அனைத்தும் கொடுக்கிறோம்.

பொதுவாக பகல் நேரங்களில் இளம் தலைமுறையினர், பிசினஸ் பேச வருபவர்கள், அமைதியான இடத்தில் வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள்தான் வருவார்கள். அவர்கள் ஸ்டாடர்கள், வுட் பயர் பீட்சா, சாலட்ஸ், குளிர்பானங்கள் போன்றவற்றைதான் அதிகம் விரும்புகிறார்கள். இரவு ேநரத்தில் குடும்பத்துடன் வந்து சாப்பிட்டு மகிழ விரும்புகிறவர்களுக்கு முழுமையான உணவு டிரீட் கொடுக்க விரும்பினோம். அதனால் தான் சூப்பில் ஆரம்பித்து டெசர்ட் வரை அனைத்தும் இங்கு வழங்கி வருகிறோம். தற்போது காலை நேர சிற்றுண்டியும் கான்டினெட்டல் ஸ்டைலில் கொடுக்க இருக்கிறோம்’’ என்றவரை தொடர்ந்து அனிதா ஆர்கிடெக்ட் உணவகம் அமைத்த காரணத்தைப் பற்றி விவரித்தார்.

‘‘பொதுவாக நாம் ஒரு பர்னிச்சர் கடைக்கு சென்றால், அங்குள்ள பொருட்களைப் பார்ப்போம். பிடித்திருந்தால் ஆர்டர் கொடுப்போம். ஆனால் நாம் அதில் அமர்ந்து அதனை உணர்ந்து வாங்குவதில்லை. அப்படிப்பட்ட உணர்வினை கொடுக்கவே இந்த ஆர்கிடெக்ட் உணவகத்தை அமைத்திருக்கிறோம். இந்த உணவகம் எங்கள் இருவரின் கனவு என்றுதான் சொல்ல வேண்டும். எனக்கு பர்னிச்சர்களை புதுவிதமான டிசைன் செய்ய பிடிக்கும்.

திவ்யாவிற்கு புது உணவுகளை எக்ஸ்ப்ளோர் செய்ய விருப்பம். மேலும் தனி ஒரு ஆளாக ஆர்கிடெக்ட் மற்றும் உணவகம் இரண்டையும் என்னால் மட்டுமே பார்த்துக் கொள்ள முடியாது. திவ்யா உணவு துறை என்றால் நான் பர்னிச்சர்களை எவ்வாறு புதுமையாக வடிவமைக்கலாம் என்று திட்டமிடுவேன். மேலும் இங்குள்ள அனைத்து பர்னிச்சர்களுக்கான தயாரிப்பு நிறுவனம் தனியாக உள்ளது.

அங்குதான் நாங்க அனைத்தும் வடிவமைக்கிறோம். எல்லாவற்றையும்விட இங்குள்ள ஒவ்வொரு மேஜையும் ஒரு டிசைனில் இருக்கும். அதே போல் மேஜை மேல் உள்ள டிசைன்களும் மாறுபட்டு இருக்கும். அது தவிர தனிப்பட்ட அலங்கார மரப் பொருட்களும் இங்குண்டு. சாப்பிட வரும் வாடிக்கையாளர்கள் கடையில் உள்ள பொருட்களை பார்க்கலாம். அதே போல் வேண்டும் என்றால் நாங்க அதனை வடிவமைத்து கொடுப்போம். சிலர் அவர்களின் வீட்டின் அமைப்பிற்கு ஏற்ப வேண்டும் என்று கேட்பார்கள். அவர்களுக்காக தனிப்பட்ட முறையில் கஸ்டமைசும் செய்து தருகிறோம்.

இது ஆர்கிடெக்ட் கஃபே என்பதால் இங்கு வருபவர்கள் கண்டிப்பாக பர்னிச்சர்களை வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சிலர் வேலை செய்ய ஒரு தனிப்பட்ட இடம் வேண்டும் என்று விரும்புவார்கள். அவர்கள் ஒரு காபியை பருகிக் கொண்டு இங்கு வேலையினை பார்க்கலாம். ஒரு சிலர் பிசினஸ் பேச வருகிறார்கள். இளம் தலைமுறையினரின் ஹாங்அவுட் ஸ்பாட்டாகவும் உள்ளது. மேலும் சிறிய அளவில் பார்த்டே பார்ட்டி அல்லது அலுவலக பார்ட்டி கொண்டாடவும் நாங்க வசதி செய்து தருகிறோம். இப்படி பல வகையில் எங்களின் கஃபேயில் வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்ப அமைத்து தருகிறோம்.

இவை தவிர இங்கு போர்ட் கேம்களும் உள்ளது. ஒரு பாக்சில் ஆறுவிதமான விளையாட்டுகள் இருக்கும். நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் வருபவர்கள் பொழுதுபோக்கிற்காக இந்த விளையாட்டினை விளையாடி மகிழலாம். இந்த ஐடியா கொண்டு வர முக்கிய காரணம் குடும்பமாக ஒரு பொது இடத்திற்கு வந்தாலும் அனைவரும் போனில்தான் அதிக நேரம் செலவிடுகிறார்கள். ஒருவருக்கு ஒருவர் நேரம் கழிக்க வேண்டும் என்பதற்காகவே இங்கு பல அம்சங்களை அறிமுகம் செய்திருக்கிறோம்.

இப்போதுதான் புதுவித மெனுவினை நாங்க வடிவமைத்து இருக்கிறோம். ஒரு வருடம் கழித்து இதில் மாற்றம் செய்வோம். வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பாத உணவினை நீக்கி அதற்கு பதில் வேறு புதிய உணவினை அறிமுகம் செய்வோம். எங்க உணவில் ஒரு பகுதி ஆரோக்கிய உணவிற்காக ஒதுக்கி இருக்கிறோம். மேலும் அவ்வப்போது உணவுத் திருவிழாவும் இங்கு அமைக்க திட்டமிட்டிருக்கிறோம்’’ என்றனர் கோரசாக அனிதா மற்றும் திவ்யா.

தொகுப்பு: நிஷா

The post உணவை ருசித்துக் கொண்டே வீட்டையும் அலங்கரிக்கலாம்! appeared first on Dinakaran.

Read Entire Article