
தஞ்சை,
தஞ்சாவூரில் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மகப்பேறு சிகிச்சைக்காக தஞ்சாவூர் மாவட்டம் மட்டுமில்லாமல் அருகிலுள்ள பிற மாவட்டத்தில் இருந்தும் பெண்கள் வந்து செல்கின்றனர். மாநில அளவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு சிகிச்சையில் தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவமனை இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.
இந்த நிலையில், ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் முதல் தளத்தில் உள்ள மகப்பேறு பிரிவு மற்றும் குழந்தை பிரிவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனை கண்ட கர்ப்பிணி பெண்கள் செய்வதறியாது அலறினர். தீ விபத்தை தொடர்ந்து கட்டிடம் முழுவதும் மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டது.
இது தொடர்பாக உடனே தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்து கர்ப்பிணிகள், குழந்தைகளை ஒவ்வொருவராக மீட்டு வேறு கட்டிடங்களுக்கு தீயணைப்பு வீரர்கள் அழைத்துச் சென்றனர். பின்னர் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தையுடன் இருந்த தாய்மார்கள் என 100 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். அதனை தொடர்ந்து பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் மீண்டும் அந்த பகுதிக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தீ விபத்து குறித்து தகவலறிந்து மருத்துவமனைக்கு சென்ற அம்மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அப்பகுதியில் பார்வையிட்டு ஆய்வு செய்து மருத்துவர்களிடம் நிலவரம் குறித்து கேட்டறிந்தார். அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் கூறுகையில்,
"தஞ்சை அரசு இராசா மிராசுதார் மருத்துவமனை தீ விபத்தில் யாருக்கும் பாதிப்பில்லை. கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் என அனைவரும் நலமாக உள்ளனர். ஏ.சி.யில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.