தஞ்சாவூர், பிப் 12: தஞ்சாவூர் பூக்கார தெரு சுப்ரமணியசாமி கோவிலில் நேற்று தைப்பூச சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் பங்கேற்று, நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். தை மாதத்தில் பவுர்ணமியும் பூச நட்சத்திரமும் இணைந்த நாள் தைப்பூச திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. தைப்பூச தினத்தன்று விரதம் இருந்து முருகனை வழிபட்டால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். செல்வம் பெருகும். தொட்ட காரியம் கை கூடும் என்பது பக்தர்கள் மத்தியில் நிலவும் நம்பிக்கை. அதன்படி தைப்பூச நாளான நேற்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம் , வழிபாடு நடைபெற்றது. தஞ்சை பூக்கார தெரு சுப்பிரமணியசாமி கோவிலில் நேற்று தைப்பூச சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதை முன்னிட்டு காலையில் இருந்தே பக்தர்கள் குவிய தொடங்கினர். நேரம் செல்ல செல்ல பக்தர்களின் கூட்டம் அதிகரித்தது. தைப்பூசத்தை முன்னிட்டு சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. நீண்ட வரிசையில் நின்று சுப்பிரமணிய சாமியை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பல பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதேபோல், பெரிய கோவிலில் உள்ள முருகர் சன்னதி உள்ளிட்ட நகரில் உள்ள பல்வேறு முருகர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மனம் உருகி தரிசனம் செய்தனர்.
The post தஞ்சாவூர் சுப்ரமணியசாமி கோயிலில் தைப்பூச சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.