
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா மதுக்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட இளங்காடு கீழத்தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன், அகோர வீரபத்திரர் சுவாமி, விநாயகர் ஆலயத்தில் தீமிதி திருவிழா ஆனி மாதம் ஒன்பதாம் தேதி (23. 6. 2025) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழா தொடங்கிய நாளிலிருந்து கர்ணன் பிறப்பு, தர்மர் பிறப்பு உள்ளிட்ட பல்வேறு மகாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சிகள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையில் நடைபெற்று வந்தது. திருக்கல்யாணம் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள், அம்மன் வீதி உலாவும் நடைபெற்றது.
நேற்று பிற்பகல் 3 மணியளவில் திரௌபதி அம்மன் கூந்தல் முடிதல், படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலையில் அங்கிருந்து அம்மன் வீதியுலா பரசுராமன் நேந்தல் வந்து நீராட்டு விழாவும் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி நிகழ்வு மாலை 5.30 மணி அளவில் பரசுராமர் நேந்தல் அருகில் தொடங்கியது. 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சில பக்தர்கள் பிள்ளைகளை தோளில் சுமந்தபடியும், சிலர் கரகம் சுமந்தபடியும் தீக்குண்டத்தில் இறங்கினர்.