தமிழ்நாட்டின், தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் நகரில் வரலாற்றை நினைவூட்டும் விதமாக அரண்மனை ஒன்று உள்ளது. இந்த அரண்மனை தஞ்சாவூர் நாயக்கர்களால் கட்டப்பட்டது. இந்த அரண்மனையானது தஞ்சாவூர் நாயக்கர் மன்னர்களான சேவப்ப நாயக்கரால் கட்டத் தொடங்கப்பட்டு, அச்சுதப்ப நாயக்கர், இரகுநாத நாயக்கரால் தொடரப்பட்டு, விஜயராகவ நாயக்கரால் கட்டி முடிக்கப்பட்டது. பின்னர்1674இல் இருந்து 1855 வரை தஞ்சாவூர் மராத்திய அரசின் கைவசம் இருந்தது. அப்போது மராட்டிய கட்டடக்கலை நுணுக்கத்துடன் அரண்மனையின் சில பகுதிகள் கட்டப்பட்டன. பின்னர் ஆங்கிலேயர் காலத்தில் பிரிட்டானிய, பிரான்ஸ், ராஜஸ்தான் கட்டடக்கலையின் தொழில்நுட்பங்கள் பல தஞ்சை அரண்மனையின் வடிவமைப்பில் சேர்க்கப்பட்டன.
இந்த அரண்மனை வளாகமானது 110 ஏக்கர் பரப்பளவுக்கு பரந்து விரிந்துள்ளது. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாயினும், அரண்மனையின் 75 விழுக்காடு அழியாமல் இருக்கிறது. இது தமிழக தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ளது. அரண்மனையின் வளாகம் நான்கு முதன்மையான கட்டடங்களைக் கொண்டுள்ளது. மணிமண்டபம், தர்பார் மண்டபம், ஆயுத சேமிப்பு மாளிகை, நீதிமன்றம் என இவை அழைக்கப்படுகின்றன. மணிமண்டபத்தில் மொத்தம் 11 மாடிகள் இருந்துள்ளன. இந்த 11 மாடிகளில், இப்போது 8 மாடிகள் மட்டுமே இருக்கின்றன. ஒவ்வொரு மாடியிலும் நான்குப்புறச் சுவர்களிலும் மேல் வளைந்த சாளரங்கள் உள்ளன. அதனால் இதனைத் தொள்ளக்காது மண்டபம் எனப் பொதுமக்கள் அழைக்கின்றனர். இந்த மண்டபம் கண்காணிப்பு மண்டபமாகப் பயன்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
தஞ்சையைத் தலைமையாகக் கொண்ட மன்னர்கள் அமர்ந்து ஆட்சி செலுத்திய மண்டபம் தர்பார் மண்டபமாகும். பல வண்ணங்களில் அமைந்த ஓவியங்கள் தர்பார் மண்டபத்தை அலங்கரிக்கின்றன. இந்த மண்டபத்துக்கு முன் பெரிய மைதானம் உள்ளது. ஆயுத சேமிப்பு மாளிகை கோபுர வடிவில் காணப்படுகிறது. கோபுரத்துக்குச் செல்லும் படிகட்டுகள் மிகவும் சிக்கலான வளைவு, நெளிவுகளைக் கொண்டவை.
நீதிமன்ற கட்டடத்தை ஜார்ஜவா மாளிகை, சதர் மாளிகை என்றும் அழைக்கின்றனர். சதர் என்ற பாரசீகச் சொல்லுக்கு நீதிமன்றம் என்ற பொருள் உள்ளது. இது 7 மாடிகள் கொண்டதாக இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், தற்போது 5 மாடிகள் மட்டுமே உள்ளன. இந்த அரண்மனை வளாகத்தில்தான் சரஸ்வதி மகால் நூலகம், தஞ்சைக் கலைக்கூடம், தஞ்சை தீயணைப்பு நிலையம், தஞ்சை மேற்கு காவல் நிலையம், அரசுப் பொறியியல் கல்லூரி, அரசு மேல்நிலைப்பள்ளி, தொல்லியல்துறை அலுவலகம் போன்றவை அமைந்துள்ளன.
The post தஞ்சாவூர் அரண்மனை (Thanjavur Palace) appeared first on Dinakaran.