குலசேகரன்பட்டினம்,
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை ஒட்டி தினமும் முத்தாரம்மன் வெவ்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.தசரா திருவிழாவையொட்டி, விரதம் இருந்து காப்பு கட்டி பல்வேறு வேடங்களை அணிந்த பக்தர்கள் ஒவ்வொரு ஊரிலும் வீதி வீதியாக சென்று காணிக்கை வசூலிக்கின்றனர். அந்தந்த ஊர்களில் உள்ள கோவில்களின் அருகில் பிறை அமைத்து தங்கியிருந்து அம்மனை வழிபடுகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான பக்தர்கள் பல்வேறு வேடங்களை அணிந்து வழிபடுகின்றனர். கோவில்களில் தசரா பக்தர்கள் 'ஓம் காளி, ஜெய் காளி' போன்ற பக்தி கோஷங்களை விண்ணதிர முழங்கியவாறு வழிபடுகின்றனர்.
7-ம் நாளான நேற்று முன்தினம் இரவில் அம்மன் பூஞ்சப்பரத்தில் நடராஜர் திருக்கோலத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சியளித்தார். 8-ம் நாளான நேற்று இரவில் கமல வாகனத்தில் கஜலட்சுமி திருக்கோலத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இக்கோலத்தில் முத்தாரம்மனை தரிசித்தால் பொருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.