தங்கப்பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

2 months ago 11


மீனம்பாக்கம்: அமெரிக்காவில் நடந்த சர்வதேச கேரம் போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்ற தமிழ்நாட்டின் சென்னையை சேர்ந்த காசிமா உள்பட 3 பெண்களுக்கு நேற்று சென்னை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் சர்வதேச அளவிலான கேரம் விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில், தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்த காசிமா, மித்ரா, நாகஜோதி என்ற 3 பெண்கள் பங்கேற்றனர். இதில் சென்னையை சேர்ந்த காசிமா, மகளிர் தனிநபர் போட்டியில் தங்கப் பதக்கத்தையும், மகளிர் இரட்டையர் பிரிவு மற்றும் குழு பிரிவில் காசிமா உள்பட 2 பெண்களும் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் வென்றனர்.

இதைத் தொடர்ந்து, தங்கப் பதக்கம் வென்ற காசிமா, மித்ரா, நாகஜோதி ஆகிய 3 பெண்களும் கலிபோர்னியா நகரில் இருந்து டெல்லி வந்து, அங்கிருந்து ஏர்இந்தியா விமானம் மூலமாக நேற்று மாலை சென்னை விமானநிலையத்தில் வந்திறங்கினர். சென்னை விமானநிலையத்தில் தங்கப் பதக்கம் வென்ற காசிமா, மித்ரா, நாகஜோதி ஆகிய 3 பெண்களுக்கு கேரம்போர்டு விளையாட்டு வீரர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை அதிகாரிகள் சால்வை அணிவித்து, பூங்கொத்து வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர். தங்கப் பதக்கம் வென்ற சென்னையை சேர்ந்த காசிமா கூறுகையில், அமெரிக்காவில் நடந்த சர்வதேச கேரம்போர்டு விளையாட்டு போட்டிக்கு எங்களை அனுப்பி வைத்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

எங்களை இப்போட்டிக்கு அனுப்பி வைத்ததால்தான், அங்கு எங்களால் 3 தங்கப் பதக்கங்களைப் பெற முடிந்தது. எங்களை முதல்வர் முயற்சி எடுத்து அனுப்பி வைக்கவில்லை என்றால், எங்களுடைய பதக்க ஆசை நிறைவேறாமல் கனவாக போயிருக்கும். ஒவ்வொரு போட்டியும் கடினமாக இருந்தாலும், சென்னைக்கு தங்கப்பதக்கம் கிடைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் விளையாடி, தங்கப்பதக்கத்தை வென்று வந்திருக்கிறோம். இந்த கேரம்போர்டு விளையாட்டு போட்டி மூலம் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்பதை புரிந்து கொண்டு, பலரும் ஆர்வம் காட்ட வேண்டும் என்று காசிமா தெரிவித்தார்.

The post தங்கப்பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.

Read Entire Article