
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது, கூடலூர் தொகுதி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பொன் ஜெயசீலன், தனது தொகுதியில் சிறு தகவல் தொழில்நுட்ப பூங்கா ஒன்று அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அதற்கு பதில் அளித்து பேசிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், "இந்த கூட்டத் தொடரிலேயே எனது துறையில் உள்ள சிக்கல்களை தெரிவித்து இருக்கிறேன். நிதி குறைவாக ஒதுக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களைப்போல் தொழில்நுட்ப பூங்காக்கள் எங்கள் துறையின் கீழ் வருவதில்லை. டைடல் பூங்கா போன்றவை எல்லாம் தொழில் துறையிடம் உள்ளது. நிதி, திறன், அதிகாரம் இருக்கும் அமைச்சர்களிடம் கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள்" என்றார்.
அமைச்சரே இப்படி அரசுக்கு எதிரான கருத்தை சட்டசபையில் பதிவு செய்ததை தொடர்ந்து, சுதாரித்துக்கொண்ட சபாநாயகர் அப்பாவு, "இந்த பிரச்சினை குறித்து நீங்கள் முதல்-அமைச்சரிடம் பேசி முடிவு செய்யவும். உறுப்பினரின் கேள்விக்கு நேர்மறையாக பதில் சொன்னால் நன்றாக இருக்கும்" என்று சமாளித்தார்.