16 நாட்களுக்கு பிறகு கிருஷ்ணா நீர் தமிழக எல்லைக்கு இன்று வந்தது

8 hours ago 3

ஊத்துக்கோட்டை,

சென்னை நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. இந்த ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.

கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின் படி கடந்த 5-ந்தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆரம்பத்தில் வினாடிக்கு 500 கன அடி வீதம் திறக்கப்பட்டு பின்னர் தண்ணீர் திறப்பு 850 சுன அடியாக உயர்த்தப்பட்டது. கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறக்கப்படும் கிருஷ்ணா தண்ணீர் வழக்கமாக 5 அல்லது 6 நாட்களில் தமிழக எல்லைக்கு வந்தடைவது வழக்கம். தற்போது கோடை வெயில் காரணமாக கால் வாய் முழுவதும் வறண்ட தாலும், ஆந்திராவில் உள்ள விவசாயிகள் சாகுபடிக்கு அதிக தண்ணீர் எடுத்ததாலும் கிருஷ்ணா நீர் தமிழக எல்லைக்கு வந்தடைய கால தாமதம் ஏற்பட்டது.

இதையடுத்து ஆந்திர அதிகாரிகள் அங்குள்ள விவசாயிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஆந்திர விவசாயிகள் தண்ணீர் திருடுவதை நிறுத்திக் கொண்டதால் கிருஷ்ணா நீர் தமிழக எல்லை நோக்கி வேகமாக வந்தது. இன்று காலை 7 மணியளவில் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்ட் பகுதிக்கு கிருஷ்ணா தண்ணீர் வந்தடைந்தது. வினாடிக்கு 50 கன அடிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 16 நாட்களுக்குப் பிறகு கிருஷ்ணா நீர் தமிழக எல்லை வந்தடைந்து குறிப்பிடத்தக்கது.

வரும் நாட்களில் கிருஷ்ணா தண்ணீர் வரத்து படிப்படியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தண்ணீர் 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு இன்று இரவு அல்லது நாளை காலை சென்றடையும். பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி ஏரியில் 1.361 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு மழை நீர் வினாடிக்கு 210 கன அடி வீதம் வருகிறது.

Read Entire Article