த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் 2-ம் கட்ட பட்டியல் நாளை வெளியீடு

1 week ago 2

சென்னை,

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை கடந்த ஆண்டு தொடங்கினார். இதையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு அக்டோபர் 27-ந்தேதி பிரமாண்டமாக நடந்தது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். மாநாட்டில் விஜய்யின் பரபரப்பான பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

மாநாட்டை தொடர்ந்து 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது. இதற்காக, நிர்வாகிகள் நியமனம் தொடர்பான வேலைகள் த.வெ.க.வில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தில் 120 மாவட்ட செயலாளர்களை அறிவித்து அக்கட்சியின் தலைவர் விஜய் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமிக்க அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு நிர்வாகி நியமிக்க விஜய் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, பூத் கமிட்டி உறுப்பினர்கள் 5 முதல் 7 பேர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

சமீபத்தில் தவெ.க. மாவட்ட செயலர்கள் நியமனம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதில் தமிழக வெற்றிக் கழகம் அமைப்பு ரீதியாக, சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கி 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக 19 கழக மாவட்டங்களுக்கு, மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து த.வெ.க. தலைவர் விஜய் நாளை 2-வது கட்டமாக பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் நியமனம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கட்சி தலைவர் விஜய் கலந்து கொண்டு நேர்காணல் நடத்த உள்ளார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க சென்னை, செங்கல்பட்டு, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட குறிப்பிட்ட சில மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர்களின் 2-ம் கட்ட பட்டியல் நாளை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article