வெறும் சருமநிறம் கருப்பு என்பதற்காகவே அவர்களின் மரணம் கூட மரியாதையுடன் இருக்கக் கூடாது என்னும் நிலை இந்த 21ஆம் ஆண்டிலும் இருப்பதைக் காண முடிகிறது. எனில் 80 வருடங்களுக்கு முன்பு எப்படிப்பட்ட சூழலில் ஆப்பிரிக்க ஆண் – பெண் வாழ்ந்திருப்பார்கள். அப்படியான காலகட்டத்தில் ஆப்பிரிக்க கருப்பின ராணுவப்பெண்கள் குழு ஒன்று உருவாக்கிய வரலாற்றுப்பதிவுதான் இந்த ‘த சிக்ஸ் டிரிபிள் எய்ட்’. 1945 – 1946 களில் இரண்டாம் உலகப் போரின்போது 6888 ஆம் சென்ட்ரல் போஸ்டல் படாலியன் பெண்கள்இராணுவப் படையின் சேவையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம்தான் இந்த ‘த சிக்ஸ் டிரிபிள் எய்ட்’ 855 பெண்களின் உன்னத சேவையை அப்பட்டமாக காட்சிப்படுத்தி இயக்கியிருக்கிறார் டைலர் பெர்ரி. அமெரிக்காவின் மேற்கு வர்ஜினியாவின் வயதான தாய் ஒருவர் ராணுவத்திற்கு சென்ற தனது இரு மகன்களிடமிருந்து கடந்த பல மாதங்களாகவே எந்த தகவலும் வராமல் காத்திருக்கிறார். இன்னொரு புறம் குழந்தைப் பருவ நண்பர்களான லீனா மற்றும் ஆபிராம் இருவரும் தங்கள் காதல் பயணத்தில் பலவிதமான சிக்கல்களை சந்திக்கிறார்கள். லீனா ஒரு கருப்பின அமெரிக்க பெண் என்பதால் ஆபிராம் ஒரு யூதர் இனத்தைச் சேர்ந்த இளைஞர். சக தோழிகளாலேயே லீனாவும் அவரது காதலும் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகிறது. இப்படியான சூழலில் ராணுவத்தின் இளம் விமானப்போர் வீரராக பணியில் சேர்கிறார் ஆபிராம். ‘ தொடர்ந்து உனக்கு கடிதம் எழுதுவேன்’ எனச் சொல்லிச்செல்லும் காதலனிடமிருந்து எவ்விதத் தகவலும் வராமல் போகிறது. மேலும் அவர் இறந்துவிட்டார் என்கிற செய்தியும் வந்து சேரவே மனமுடைந்து நிற்கும் லீனா ராணுவத்தின் பெண்கள் படையில் சேர இருப்பதாக தனது அன்னை மற்றும் அத்தையிடம் சொல்கிறார்.
ஆனால் வெள்ளையர்களின் ராணுவப்படையில் கருப்பினப்பெண்களுக்கு உணவு பரிமாறும் மற்றும் எடுபிடி வேலைகள்தான் கொடுக்கப்படும் என அதற்கு அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள் அம்மாவும் அத்தையும். ஆனால் மீறி இராணுவத்தில் சேர்கிறார் லீனா. அங்கே லீனா மற்றும் அவரது 6888 படாலியன் படைக்கு தலைமையாக கேப்டன் சாரிட்டி ஆடம்ஸ் மற்றும் லெப்டினன்ட் நோயல் காம்ப்பெல் இருவரும் லீனா உட்பட 855 வீராங்கனைகள் அடங்கிய குழுவை போருக்குத் தயார் செய்கிறார்கள். ஆனால் இவர்கள் மொத்தக் குழுவும் கருப்பினப் படை என்பதால் இவர்களுக்கு பொறுப்புகளோ, பணியோ எதுவும் கொடுக்கப் படாமல் இருக்கிறது. மேலும் பல விதங்களில் அவமானங்களையும் சந்திக்கிறார்கள். இதற்கிடையில் மெலிந்த , வலிமையற்ற லீனாவும் இராணுவப்பயிற்சிகளில் தொடர்ந்து தோல்விகளை சந்திக்கிறார்.மேற்கு வெர்ஜினியாவின் வயதான தாய் நேரடியாகவே வெள்ளை மாளிகைக்குச் சென்று மழை, வெயில் எனக் காத்துக்கிடக்கிறார். ராணி அன்னா எலினோர் ரூசுவெல்ட் விசாரித்ததில் அப்போதுதான் ராணுவ வீரர்களுக்கும் அவர்கள் வீட்டுக்குமான கடிதப் போக்குவரத்து பல மாதங்களாகவே நின்று போயிருப்பது தெரிய வருகிறது. இதனைத் தொடர்ந்து அமெரிக்க ஐக்கிய குடியரசுத் தலைவர் பிராங்கிளின் டெலானோ ரூஸ்வெல்ட் இதற்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ விரைவில் எடுக்க வேண்டும் என ஆணையிடுகிறார். பல மாதங்களாக லட்சக் கணக்கான கடிதங்கள் எங்கும் சென்று சேராமல் பிரான்ஸில் தேங்கிக் கிடப்பதும் இதை உரியவர்களிடம் சேர்ப்பது பணியாளர்களுக்கு சிக்கலாக இருப்பதாகவும் தெரியவருகிறது. வெள்ளையர் பெண் இராணுவப் படையால் கூட இந்தக் கடிதங்களை சரிவர பிரிக்க முடியவில்லை என அதிகாரிகள் கூற இந்தப் பணியை சிறப்பாக செய்து முடிக்கும் பொறுப்பு கேப்டன் சாரிட்டி ஆடம்ஸின் 6888 படாலியன் குழுவுக்குக் கொடுக்கப்படுகிறது. மேலும் மொத்த வேலையும் ஆறு மாதங்களில் முடிக்கும்படி கட்டளை வருகிறது.
அமெரிக்கா முதல் பிரான்ஸ் வரை செல்லும் எஸ்எஸ் லி டி பிரான்ஸ் என்கிற வரலாற்று சிறப்பு மிக்க கப்பலில் வரவழைக்கப்படுகிறார்கள் 855 பெண்கள் அடங்கிய படை. புயலும், மழையும், கடல் சீற்றமும், கடும் குளிரும் சூழ தகுந்த பாதுகாப்பு உடைகள், கப்பல் படையின் வீரர்கள் கூட இல்லாமல் வந்து சேர்கிறார்கள். ஆனால் வந்தவுடன் வெள்ளைக்கார கமாண்டோ ஆடம்ஸ்க்கு உங்கள் வீராங்கனைகளை துறைமுகத்தில் இருந்தே மார்ச் செய்து வர வைத்து உங்கள் திறமையை நிரூபியுங்கள் என அவமானப் படுத்த நினைக்கிறார். ஆனால் அதையும் தாங்கிக் கொண்டு கடும் குளிரில் , பயணக் களைப்பிலும் கூட அத்தனைப் பெண்களும் நகரம் முழுக்க மார்ச் செய்து நடந்து வந்து கேப்டன் ஆடம்ஸை தலை நிமிரச் செய்கிறார்கள். தொடர்ந்து பாதுகாப்பற்ற, போர் குண்டுகளால் தாக்கப்பட்ட , எலிகள் சூழந்த ஒரு பள்ளிக்கூடம் அவர்களுக்கு இருப்பிடமாகக் கொடுக்கப்படுகிறது. அத்தனையையும் சுத்தம் செய்து , தொடர்ந்து அந்தந்த பின்கோடுகளுக்கு ஏற்ப கடிதங்களைப் பிரிக்கும் வேலை ஆரம்பிக்கிறது. ஆனால் பலரும் பாதி பெயர்கள், சரியான பின் கோடுகள் இல்லாமை, அடையாளங்கள் இல்லாமல் பிரிக்க முடியாமல் முதல் இரண்டு மாதங்கள் தடுமாறுகின்றனர். இந்நிலையில்தான் கடிதங்கள் எவ்வளவு முக்கியம், தன் காதலனிடம் இருந்து வர வேண்டிய ஒரு கடிதம் கிடைக்காமல்தான் இன்று வரை தான் எதாவது ஒரு தகவல் கிடைக்காதா எனத் தேடிக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கிறார் லீனா. அதுவரை இந்த வேலையை தங்கள் பலத்துக்குக் கொடுக்கப்பட்ட அவமானமாக நினைத்துக் கொண்டிருந்த கேப்டன் ஆடம்ஸ் உட்பட அத்தனைப் பேரும் அன்று முதல் வேலையில் மேலும் கவனம் காட்டுகிறார்கள். இறந்த வீரர்களுக்கு நாம் செய்யும் மரியாதை இதுதான், மேலும் போரில் தன்னலம் இல்லாமல் சண்டையிடும் வீரர்களுக்கு குறைந்த பட்சம் அவர்கள் குடும்பம் நலமாக இருக்கிறது என்னும் செய்தியாவது சேர்க்க வேண்டும் எனப் புரிந்து கொள்கிறார்கள்.
கடிதத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து லீனாவை தேற்றுகிறார் ஆடம்ஸ். லீனாவுக்கு ஆபிராம் எழுதிய கடிதமும் கிடைக்கிறது. இடையில் ஒரு பகுதி கடிதங்களைக் கொண்டு சென்ற வண்டியுடன் இராணுவப் பெண்கள் இருவர் கண்ணி வெடி வெடித்து இறந்துவிடுகிறார்கள். மரணம் எய்திய பெண்களுக்கு உரிய மரியாதையுடன் இறுதி சடங்கு கூட நடத்த பணம் கொடுக்காமல் வெள்ளையர்கள் அதிகாரம் அவமானப் படுத்துகிறது. படாலியன் பெண்களே ஒன்றாக இணைந்து அவர்களுக்குள் பணம் போட்டு இறந்த பெண்களுக்கு இறுதி சடங்கு செய்கிறார்கள். அந்த சடங்கிலேயே அவரது காதலனின் கல்லறை இருக்கும் இடத்தையும் பார்க்க உதவுகிறார் கேப்டன் ஆடம்ஸ். இடையில் வெள்ளை அதிகாரிகளின் குடைச்சல், புகார்கள், தொடர் நெருக்கடிகள் என பலவாறு கஷ்டப்படுத்தப்படுகிறார்கள் 6888 போஸ்டல் படாலியன் குழு. மதப் போதகராக ஒரு வெள்ளையர் வரஅவரும் இவர்களை சாத்தான்களின் குழு அளவுக்கு உதாசினப் படுத்துகிறார். இதற்கிடையில்தான் லீனா தனது புத்தி சாதுர்யத்தால் கடிதங்களை பிரிக்கும் வழிகளையும் கண்டுபிடிக்க மொத்த குழுவும் 90 நாட்களில் 1 கோடியே 75 லட்சத்துக்கும் அதிகமான கடிதங்களை வீரர்களுக்கும், வீரர்களின் கடிதங்களை அவர்கள் குடும்பத்துக்கும் என சேர்க்கிறார்கள். எந்தப் பலனும், அங்கீகாரமும், ஏன் குறைந்த பட்ச பாராட்டுகள் கூட கிடைக்காமல் இருக்கும் ஆடம்ஸ் தலைமையிலான 6888 போஸ்டல் படாலியன் குழுவுக்கு கடிதமின்றி தவித்து ஒரு வழியாக தகவல்கள் பெற்ற அத்தனை இராணுவ ஆண்களும் வெள்ளையர்கள் உட்பட சல்யூட் அடித்து கைகள் தட்டுவார்கள். ஆனந்தக் கண்ணீர் மல்க பெண்கள் படாலியன் குழு அங்கிருந்து நகரும். படம் முடிவில் உண்மையான வரலாற்று காட்சிகள், பணியாற்றிய பெண்களுக்கு பல வருடங்கள் கழித்து அவர்களின் ஓய்வு வேளையில் கிடைத்த பாராட்டுகள், பதக்கங்கள் பெற்ற வீடியோக்கள், புகைப்படங்கள் என அத்தனையும் ஒன்றிணைந்து நம்மையும் கண் கலங்க வைத்து சல்யூட் அடிக்கச் செய்யும் படம். ஓடிடியில் வெளியாகியிருக்கும் இப்படம் நிச்சயம் குடும்பமாக, குறிப்பாக பெண்கள் பெற்ற பெற்றோர்கள் காண வேண்டிய படம். இன்று பெண்கள் பல துறைகளிலும் கால் பதித்து ,சுதந்திரமாக, சுயமாக சிந்தித்து முன்னேறி வருகிறோம் எனில் நமக்குப் பின்னால் இப்படிப் போராடிய பெண்களின் தியாகமும், சாதனையும் ஏராளமாக இருக்கின்றன என்பது மட்டும் உண்மை.
– மகளிர் மலர் குழு
The post த சிக்ஸ் டிரிபிள் எய்ட்? appeared first on Dinakaran.