'ட்ராமா' படம் எப்படி இருக்கிறது? - விமர்சனம்

1 day ago 2

சென்னை,

இயக்குனர் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில் விவேக் பிரசன்னா நடித்துள்ள படம் 'ட்ராமா'. இந்த படத்தில் சாந்தினி தமிழரசன், பிரதோஷ், பூர்ணிமா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதற்கு ராஜ் பிரதாப் இசையமைத்துள்ளார். இப்படம் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களின் தேவைகளை சுயநலத்துக்காக சிலர் எப்படி பயன்படுத்துகின்றனர் என்பதை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தம்பிதுரை மாரியப்பன் இயக்கிய 'ட்ராமா' படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

விவேக் பிரசன்னா, சாந்தினி தமிழரசன் தம்பதி குழந்தை பாக்கியம் இல்லாமல் செயற்கை முறை கருத்தரிப்பு சிகிச்சை எடுத்துக் கொள்கிறார்கள். அதன் பலனாக கர்ப்பமாகும் சாந்தினி தமிழரசன் கர்ப்பத்துக்கு கணவர் காரணம் அல்ல என்று தெரிந்து அதிர்கிறார்.

பிரதோஷ், பூர்ணிமா ரவி இருவரும் காதலிக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஒன்று சேர முடியாத சூழ்நிலை. மதன் கோபால் கார்களை திருடி கொலை பழியில் சிக்குகிறார். இவர்கள் எப்படி ஒரு புள்ளியில் இணைகிறார்கள். பிரச்சினைகளிலிருந்து அவர்களால் வெளியே வர முடிந்ததா? என்பது மீதி கதை. 

விவேக் பிரசன்னா, மனைவியின் தாம்பத்ய தேவையை பூர்த்தி செய்ய முடியாத குற்ற உணர்ச்சிகளால் தவிப்பது, மனைவியை ஆதரவு கரம் நீட்டி அணைப்பது என தன் எல்லைகள் அறிந்து கதாபாத்திரத்தில் வாழ்ந்துள்ளார். சாந்தினி தமிழரசன் பதற்றமடையாமல் கதாபாத்திரத்தை நேர்த்தியாக செய்துள்ளார். பிரதோஷ் துறு துறு நடிப்பில் கவனம் பெறுகிறார். பூர்ணிமா ரவிக்கு முகத்தில் பூரிப்பு தெரியக்கூடாத வேடம். அதை அவரும் உள்வாங்கி பிரமாதமாக நடித்துள்ளார்.

மதன் கோபால் நக்கல், நையாண்டி செய்து கோலிவுட்டில் தனது இடத்தை பாதுகாத்துக் கொள்கிறார். 'ஸ்மைல்' செல்வா சிரிக்க வைக்கிறார். நண்பராக வரும் ஆனந்தநாக் அளவாக நடித்துள்ளார். அவருடைய இன்னொரு முகம் அதிர்ச்சி. மாரிமுத்து, ரமா, பிரதீப் கே. விஜயன், நமோ நாராயணன், சஞ்சீவ், நிழல்கள் ரவி, வையாபுரி என அனைவரும் கதாபாத்திரத்தில் நிறைவு. படத்தில் லாஜிக் குறைகள் இருந்தாலும் அதைப் பற்றி யோசிக்காதபடி கதையின் நம்பகத்தன்மை காப்பாற்றுகிறது.

ஒளிப்பதிவாளர் அஜித் சீனிவாசன் காட்சிகளுக்கு ஏற்ப வண்ணம் சேர்த்துள்ளார். ராஜ் பிரதாப் கதையில் இருக்கும் மென் சோகத்தை பின்னணி இசை வழியாக கடத்தி பலம் சேர்த்துள்ளார். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களின் தேவைகளை சுயநலத்துக்காக சிலர் எப்படி பயன்படுத்துகின்றனர் என்பதையும் அதில் உள்ள ஆபத்துக்களையும் சொல்லி காலத்துக்கு ஏற்ற கட்டாய படமாக கொடுத்துள்ளார் இயக்குனர் தம்பிதுரை மாரியப்பன்.

Read Entire Article