ட்ரக்கோமா என்னும் கண் நோயை முழுவதுமாக நீக்கியதற்காக இந்தியாவை பாராட்டி சான்றிதழ் வழங்கியது WHO

3 months ago 18

ஜெனீவா: கண் இமைகளில் ஏற்படும் நோய் தொற்றான ட்ரக்கோமாவை முழுவதுமாக நீக்கியதற்காக உலக சுகாதார நிறுவனம் இந்திய அரசுக்கு பாராட்டு சான்று வழங்கியுள்ளது. ட்ரக்கோமா என்பது கிளமிடியல் டிராக்கோமாடிஸ் என்னும் ஒருவகை பாக்டீரியாவால் ஏற்படும் கண் நோய் ஆகும். உலகில் 19 லட்சம் மக்களை இந்நோய் பார்வை திறன் குன்றியவர்களாகவோ, பார்வையற்றவர்களாகவோ மாற்றியுள்ளது.

இந்தியாவில் 1950-60 காலகட்டத்தில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். இந்திய அரசு 1963-ல் தேசிய ட்ரக்கோமா கட்டுப்பாட்டு திட்டத்தை அறிமுகபடுத்தியது. 1971-ம் ஆண்டு ட்ரக்கோமாவால் பார்வை திறன் பாதிப்பு 5 சதவிகிதமாக இருந்தது. இன்று பார்வை குறைபாட்டிற்கான தேசிய திட்டத்தின் காரணமாக அது 1 சதவிகிதத்திற்கும் கீழாக குறைந்துள்ளது. ட்ரக்கோமாவுக்கான அறுவை சிகிச்சை சேவைகளை வழங்குதல், சமுகங்களிடையே தண்ணீர், சுகாதாரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றை உறுதி செய்ததன் விளைவாக இந்தியா ட்ரக்கோமாவில் இருந்து விடுபட்டுள்ளது.

2017-ம் ஆண்டிலேயே இந்திய அரசு தொற்று ட்ரக்கோமாவில் இருந்து விடுபட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவின் வெற்றிக்கு அதன் அரசாங்கத்தின் வழுவான தலைமை, கண் மருத்துவர்கள், பிற சுகாதார பணியாளர்களின் அர்பணிப்பு காரணம் என தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனம் தற்போது பாராட்டு சான்றிதழை வழங்கியுள்ளது.

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் நேபாளம், மியான்மர்க்கு அடுத்தப்படியாக ட்ரக்கோமாவை கட்டுப்படுத்திய நாடு என்கிற பெயரை இந்தியா பெற்றுள்ளது. தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் 19 நாடுகளில் இந்தியா உட்பட 3 நாடுகள் மட்டுமே ட்ரக்கோமவை கட்டுப்படுத்தியுள்ளன. உலக சுகாதார அமைப்பின் இன் 77வது பிராந்திய குழு அமர்வில் ‘பொது சுகாதார விருதுகள்’ நிகழ்வின் போது இந்த அங்கீகாரம் அறிவிக்கப்பட்டது.

The post ட்ரக்கோமா என்னும் கண் நோயை முழுவதுமாக நீக்கியதற்காக இந்தியாவை பாராட்டி சான்றிதழ் வழங்கியது WHO appeared first on Dinakaran.

Read Entire Article