வாஷிங்டன்,
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரும் நவம்பர் மாதம் 5-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (வயது 78) போட்டியிடுகிறார். அதே சமயம், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதியும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் (59) களமிறங்கி உள்ளார்.
தேர்தல் நெருங்கி வரும் சூழலில் இருவரும் தற்போது தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக ஜனநாயக கட்சியின் வேட்பாளராக ஜோ பைடன் (81) அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால் வயோதிகம் உள்ளிட்ட காரணங்களால் சொந்த கட்சியினரிடம் இருந்தே ஜோ பைடன் போட்டியிடுவதற்கு எதிர்ப்புகள் வலுத்தன. இதனால் அவர் போட்டியில் இருந்து விலகினார்.
இதன் பின்னர் கமலா ஹாரிஸ் வேட்பாளராக களமிறங்கிய பிறகு ஜனநாயக கட்சிக்கான ஆதரவு அதிகரித்ததாக கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்தன. அதிலும் குறிப்பாக பிலடெல்பியாவில் கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்டு டிரம்ப் இடையே நடைபெற்ற நேரடி விவாதம் கமலாவுக்கே சாதகமாக அமைந்தது என அந்நாட்டு ஊடகங்கள் கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டன.
இந்த நிலையில், மிச்சிகன் மாகாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கமலா ஹாரிசை ஆதரித்து முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்சேல் ஒபாமா பிரசாரம் மேற்கொண்டார். அப்போது டிரம்ப் மீது கடுமையான விமர்சனங்களை மிச்சேல் ஒபாமா முன்வைத்தார். தனது பிரசாரத்தின்போது அவர் பேசியதாவது;-
"இந்த தேர்தலில் டிரம்ப்புக்கு ஏன் இன்னும் கணிசமான அளவில் ஆதரவு கிடைக்கிறது என்பது எனக்கு புரியவில்லை. வேட்பாளர்கள் அனைத்து தகுதிகளையும் உடையவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புவதற்கு வாக்காளர்களுக்கு அனைத்து உரிமையும் இருக்கிறது. நாம் கமலா ஹாரிஸ் மிகவும் திறமை வாய்ந்தவராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அவரிடம் சரியான கொள்கைகள் இருக்க வேண்டும், அவர் புத்திசாலியாக இருக்க வேண்டும், அவர் கோபப்படக் கூடாது என்றெல்லாம் நாம் நினைக்கிறோம்.
ஆனால் டொனால்டு டிரம்ப்பின் மோசமான குணத்தை யாரும் கண்டுகொள்வதில்லை. அவரிடம் நாம் எதையும் எதிர்பார்ப்பதில்லை. கொள்கையை பற்றிய புரிதல், பேச்சாற்றல், நேர்மை, ஒழுக்கம் என எதையுமே நாம் அவரிடம் எதிர்பார்ப்பதே இல்லை."
இவ்வாறு மிச்சேல் ஒபாமா தெரிவித்தார்.