
லக்னோ,
ஐ.பி.எல். தொடரில் லக்னோவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக மார்க்ரம் 52 ரன் எடுத்தார்.
டெல்லி தரப்பில் முகேஷ் குமார் 4 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 160 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி 17.5 ஓவரில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 161 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 57 ரன் எடுத்தார்.
இந்த போட்டியில், டெல்லி அணியின் விக்கெட் கீப்பர் லோகேஷ் ராகுல் 51 ரன் எடுத்த போது, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 5 ஆயிரம் ரன்களை (130-வது இன்னிங்ஸ்) கடந்தார். இந்த மைல்கல்லை அடைந்த 8-வது வீரர் ஆவார். அதே சமயம் அதிவேகமாக 5 ஆயிரம் ரன்களை எட்டிய வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்பு டேவிட் வார்னர் 135 இன்னிங்சில் இந்த இலக்கை எட்டியதே அதிவேகமாக இருந்தது.
அதிவேகமாக 5 ஆயிரம் ரன்களை எட்டிய வீரர்கள் பட்டியல்:
கே.எல்.ராகுல் - 130 இன்னிங்ஸ்
டேவிட் வார்னர் - 135 இன்னிங்ஸ்
விராட் கோலி - 157 இன்னிங்ஸ்
டி வில்லியர்ஸ் - 161 இன்னிங்ஸ்
ஷிகர் தவான் - 168 இன்னிங்ஸ்