டேட்ஸூ டன் ஒரு டேட்டிங்!

3 days ago 1

நன்றி குங்குமம் தோழி

இயற்கை 360°

இதோ ஆரம்பித்துவிட்டது ரமலான் நோன்பு!

இந்த ஒரு மாதக் காலமும், பகல் முழுதும் தண்ணீர் கூடப் பருகாமல் நோன்பிருக்கும் இஸ்லாமியர்கள், சூரிய அஸ்தமனம் நிகழ்ந்தவுடன் இறைவனைத் தொழுது, பிறகு‘இஃப்தார்’ நோன்பு திறக்க, முதலில் உட்கொள்வது பேரீச்சை தான்! காரணம், விரதமிருக்கும்போது, உடலில் குறையும் குளுகோஸ் அளவை பேரீச்சையின் சுக்ரோஸ், குளுகோஸ் மற்றும் ஃப்ரக்டோஸ் சர்க்கரைகள் உடனடியாக அதிகரித்து, அதீதப் பசியைக் குறைக்கின்றன.

பெண்கள் ரத்த சோகையுடன் இருந்தாலோ, நோய் வாய்ப்பட்டிருந்தாலோ ‘‘ரத்தம் கம்மியா இருக்கும் போல, முகமெல்லாம் வெளுத்திருக்கு… பேரீச்சம் பழம் சாப்பிடு” என்று வீட்டிலுள்ளவர்கள் சொல்லக் கேட்டிருப்போம்..! கருவுற்ற பெண்களுக்குப் பரிந்துரைக்கப்படும் முக்கியமான இயற்கை உணவும் பேரீச்சை தான்! குழந்தைகள் பள்ளி அல்லது விளையாட்டிலிருந்து வீடு திரும்பியவுடன், பேரீச்சை சிரப் அல்லது பாலில் ஊறிய பேரீச்சை தருவது பாட்டிமார்களின் வழக்கம்! விரதம் முடிக்கும் போதும், ரத்த சோகை, கருவுற்றிருக்கும் போதும், குழந்தைகளுக்கும், நோய்க் காலங்களிலும் பெரிதும் பரிந்துரைக்கப்படும் பிசுபிசுப்பான இனிப்பு பழத்தில், அப்படி என்னதான் இருக்கிறது என அறிய, இயற்கை 360°யில் டேட்ஸுடன் ஒரு டேட்டிங் செய்வோம் வாருங்கள்!

இனிப்பும், துவர்ப்பும் கலந்த சுவை கொண்ட பேரீச்சை ஆங்கிலத்தில் Dates என அழைக்கப்பட்டாலும், அதன் தாவரப்பெயர் Phoenix dactylifera ஆகும். கிரேக்க மற்றும் இலத்தீன் மொழிகளிலிருந்து பெறப்பட்ட இந்த தாவரப்பெயரில் Phoenix என்பது பீனிசீயா நிலப்பரப்பில் விளையும் தாவரம் என்பதாலும், dactylifera என்பது விரல்கள் போன்ற நீண்ட சிவப்புப் பழங்கள் என்பதையும் குறிக்கிறது. பேரீச்சை அல்லது பேரீச்சம் பழம் என்று தமிழில் அழைக்கின்றனர்.

எட்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகப் பயிரிடப்பட்டு வரும் பேரீச்சையில் Medjool, Barhi, Dayri, Hayani என மூவாயிரத்திற்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன என்பதுடன், இவற்றில் மிக மென்மையான மெஜ்தூல் பழங்கள் பேரீச்சையின் ராணி என்றே அழைக்கப்படுகின்றன.பேரீச்சை வெப்பநிலையில், பாலைவனங்களில் வளரும் மரவகைத் தாவரம். கொத்துக்கொத்தாகப் பூத்து, பின்னர் காய்த்துக் கனியாவதுடன், இதன் இளங்காய்கள் பச்சை நிறத்திலும், சற்று முதிர்ந்தவை சிவப்பு அல்லது மஞ்சள் நிறத்திலும், நன்கு பழுத்தவை கருமை அல்லது கரும்பழுப்பு நிறத்திலும் காணப்படும். கன்றிலிருந்து வளரும் பேரீச்சை மரங்கள் 6-8 ஆண்டுகளில் காய்க்கத் தொடங்குகின்றன. அதிகப்படியான சூரிய ஒளியும், நீரும் இவற்றிற்குத் தேவைப்படுகிறது என்பதாலேயே, ‘‘கால்களை நீரிலும், தலையை நெருப்பிலும் வைத்திருக்கும் மரம்” என அழைக்கப்படுகிறது. காய்ப்புக்கு வந்தபின் சராசரியாக 60-80 ஆண்டுகள் வரை தொடர்ந்து உற்பத்தி செய்யும்.

நூற்றிற்கும் மேலான சத்துக்களையும், கனிமங்களையும் கொண்ட சிவப்பு மற்றும் கருஞ்சிவப்பு நிறப் பேரீச்சை, சூரியசக்தி அனைத்தும் தன்னுள்ளே கொண்ட பழம் என்றே வழங்கப்படுகிறது. சுக்ரோஸ், மால்ட்டோஸ், ஃப்ரக்ட்டோஸ், குளூக்கோஸ் உள்ளிட்ட நேரடி மாவுச்சத்துகள் நிரம்பிய அதிக கலோரிகள் கொண்ட இயற்கை உணவாக பேரீச்சை இருக்கிறது. மேலும் அதிக நார்ச்சத்து, கனிமச்சத்துகள் குறிப்பாக பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம், செலீனியம், இரும்புச்சத்து, ஃபாஸ்பரஸ், ஃப்ளுரைட் மற்றும் வைட்டமின்கள் A, C, E, B, இவற்றுடன் சிறிதளவு புரதம் மற்றும் கொழுப்புகளும் பேரீச்சையில் உள்ளது.

குறிப்பாக லூசின் (Leucine), ஐஸோ-லூசின் (Isoleucine), திரியோனின் (Threonine), ஃபினைல் அலானின் (Phenyl alanine), லைசின் (Lysine) போன்ற பல அத்தியாவசிய அமினோ அமிலங்களும், பாமிடிக் அமிலம் (Palmitic), ஸ்டியரிக் அமிலம் (Stearic), லினோலிக் அமிலம் (Linoleic), ஒலீக் அமிலம் (Oleic acid) போன்ற அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களும் நிறைந்தது என்பதாலேயே இதனை சத்துகளின் கிடங்கு, அதாவது, ‘Power house of Nutrients’ என்கின்றனர். மனிதன் முதன்முதலாக பயிரிட்ட மரங்களுள் ஒன்றான பேரீச்சை, பாபிலோனிய, மெசபடோமிய கலாச்சாரங்களில் உணவாகவும், மதுபானமாகவும் திகழ்ந்துள்ளது.

உடனடி ஆற்றல், ரத்த சுத்திகரிப்பு, ரத்த விருத்தி, நோயெதிர்ப்பு ஆற்றல், புற்றுநோய் எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு ஆற்றல், ஞாபகத்திறன் அதிகரிப்பு போன்ற பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்தவை பேரீச்சை. இதில் தாவரச்சத்துகளான ஃபைட்டோ ஸ்டீரால்கள், பாலிஃபீனால்கள் குறிப்பாக ப்ரோ- அன்த்தோ சயனின்கள், கரோட்டினாய்டுகள், ஜியா-சாந்தின், லூட்டின், பெக்டின், ஐஸோ-ஃப்ளாவின் மற்றும் ஃபைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் போன்றவை மருத்துவ குணங்கள் மற்றும் ஆரோக்கியத்திற்கு காரணமாக விளங்குகின்றன.

மேலும் பேரீச்சையின் கால்சியம், காப்பர், செலீனியம், பொட்டாசியம், எலும்பு மற்றும் தசைகளின் வலிமையைக் கூட்டவும், மூட்டு நோய் மற்றும் தசைவீக்கத்தை குறைக்கவும் உதவுகின்றன. இதன் நார்ச்சத்து குடலியக்கத்தை சீர் செய்வதால் வயிற்று அழற்சி, செரிமானமின்மை, பெருங்குடல் நோய், குடல் புற்று, குடல் புழுக்கள், மலச்சிக்கல், மூலநோய் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பளிக்கிறது. இதிலுள்ள இரும்புச்சத்து கால்சியம், ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் ஈ சத்துகள், ரத்த விருத்தி, ரத்த சுத்திகரிப்பு, உறுப்புகள் வளர்ச்சி என தாய்-சேய் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துகிறது.

இதய நோய், உயர் ரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால், பக்கவாதம், அல்சைமர், பார்க்கின்சன் உள்ளிட்ட மூளைத்தேய்வு நோய்கள், மன அழுத்தம், புற்றுநோய் போன்ற வாழ்க்கை முறை நோய்கள், ஆஸ்துமா, அலர்ஜி தாக்கத்தை மட்டுப்படுத்தவும், Macular Degeneration, கண்புரை போன்ற வயோதிகம் சார்ந்த கண் நோய், மாலைக்கண் நோய்க்கு மருந்தாகவும், புறஊதாக் கதிர்களின் தாக்கத்திலிருந்து சருமத்தைப் பாதுகாத்து, சுருக்கங்கள் குறையவும், தழும்புகள் மறையவும், பல் ஆரோக்கியம், வாய் சுகாதாரம், முடி வளர்ச்சி போன்றவற்றிற்கும் பேரீச்சை உதவுகிறது.சிறுநீர் போக்கியாகவும், கல்லீரல் மற்றும் மண்ணீரல் செயல்பாடுகளை பாதுகாத்து மது மற்றும் பிற போதைகளிலிருந்து விடுபடவும் உதவுவதாலே ஆயுர்வேத, யுனானி மற்றும் சித்த மருத்துவங்களில் முக்கிய இடத்தை பேரீச்சை பிடிக்கிறது. இவற்றுடன் ஆண்மைத் தன்மை அதிகரித்து, பாலுணர்வைத் தூண்ட பேரீச்சை பயன்படுவதால், அரபு நாட்டின் காதல் சின்னமாகவும் திகழ்கிறது. பேரீச்சையில் இருந்து தயாரிக்கப்படும் ஸ்மூத்தி மற்றும் மில்க் ஷேக் அரபு நாடுகளில் வெகு பிரசித்தம் என்றால், சாலட், கேக், ஐஸ்கிரீம், கேண்டி ஆகியவற்றில் பெருமளவு பயன்படுத்தப்படும் ‘Fruit of the Desert’ ஆகவும் பேரீச்சை விளங்குகிறது.

பேரீச்சையிலும் எதிர்மறை விளைவுகள் இல்லாமல் இல்லை. இதன் அதிக கலோரிகள் உடற்பருமனை ஏற்படுத்தவும், இதன் உடனடி ஆற்றல்கள் சர்க்கரை நோயைக் கூட்டவும் செய்வதால் அதிகம் உட்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது என்று எச்சரிக்கின்றனர். ஒருசிலருக்கு ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு, செரிமானமின்மை ஆகியனவும் ஏற்படக்கூடும். சிலருக்கு பல் கூச்சம், பற்சிதைவு காணப்படுகிறது. இதன் பிசுபிசுப்புத் தன்மை காரணமாக, மண் மற்றும் இதர அழுக்குகள் இதில் படிந்துவிடுகின்றன. நாள்பட்ட பழங்களால் food poison எனப்
படும் வயிற்றுப்போக்கு ஏற்படும்.

உலகளவில் எகிப்து, சவூதி அரேபியா, அல்ஜீரியா, ஈரான், பாகிஸ்தான், ஈராக் ஆகிய நாடுகள் பேரீச்சை பழத்தை பெருமளவு உற்பத்தி செய்து, உலகெங்கும் ஏற்றுமதி செய்கின்றன. அமெரிக்காவில் காணப்படும் மென்மையான, இனிப்பான California dates, Medjool வகையைச் சார்ந்தவை இந்தியாவில் ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில், திசு வளர்ப்பு மூலம் தமிழகத்திலும் பேரீச்சை பயிரிடப்படுகிறது என்றாலும் அதன் அளவு குறைவுதான்.

பெயரிலும், பாரம்பரியத்திலும், சுவையிலும், குணங்களிலும் பெருமை நிறைந்திருக்கும் இந்த பேரீச்சையை, பெருமை+ஈச்சை=பேரீச்சை என ஒருநாளில் மூன்று அல்லது நான்கு
பழங்கள் என்றளவில் உட்கொண்டு, இதன் எண்ணிலடங்கா நன்மைகளையும் பெறுவோம்..!

(இயற்கைப் பயணம் நீளும்!)

மருத்துவர்: டாக்டர் சசித்ரா தாமோதரன் மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்

The post டேட்ஸூ டன் ஒரு டேட்டிங்! appeared first on Dinakaran.

Read Entire Article