டெஸ்ட் போட்டிகளில் அந்த நாள்தான் மிகவும் கடினமானது - மகேந்திரசிங் தோனி கருத்து

2 months ago 12

மும்பை,

டெஸ்ட் கிரிக்கெட்டின் சுவாரசியத்தை கூட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற புதிய சாம்பியன் பட்டத்தை ஐ.சி.சி. அறிமுகப்படுத்தியது. அதனால் இப்போதெல்லாம் பெரும்பாலான அணிகள் டிரா செய்தால் போதும் என்ற எண்ணத்தை விட்டுவிட்டு வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் அதிரடியாக விளையாடுகின்றன.

அதன் காரணமாக இப்போதெல்லாம் டெஸ்ட் கிரிக்கெட்டில் டிராவாகும் போட்டிகளை பார்ப்பது அரிதாகி விட்டது. இது போக தற்போதுள்ள வீரர்கள் டி20 கிரிக்கெட்டில் அதிகமாக விளையாடுகின்றனர். அதனால் இப்போதெல்லாம் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் நிறைய வீரர்கள் அதிரடியாக விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் அதிகப்படியான டி20 கிரிக்கெட்டின் வருகையாலேயே டெஸ்ட் போட்டிகளில் டிரா என்பது குறைந்துள்ளதாக இந்திய முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி கூறியுள்ளார். தாம் ஓய்வு பெற்ற 2014க்குப்பின் டெஸ்ட் கிரிக்கெட் மாறியுள்ளது குறித்து சமீபத்திய பேட்டியில் தோனி பேசியது பின்வருமாறு:-

"கிரிக்கெட்டுக்கு நீங்கள் விரும்பும் எந்த அர்த்தத்தை வேண்டுமானாலும் கொடுக்கலாம். ஆனால் கிரிக்கெட் தற்போது வளர்ச்சியடைந்துள்ளதை நாம் பார்க்கிறோம். தற்போதுள்ள வீரர்களும் வித்தியாசமாக விளையாடுகிறார்கள். ஒரு காலத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் குறிப்பிட்ட ஸ்கோர் பாதுகாப்பானதாக இருந்தது. ஆனால் இன்று டி20 கிரிக்கெட்டால் எந்த ஸ்கோரும் பாதுகாப்பாக இல்லை. சில வீரர்கள் அதிரடியாக விளையாடுகிறார்கள். சிலர் நிதானமாக விளையாடுகின்றனர்.

இருப்பினும் உங்களுடைய அணியின் பலத்தை உணர்ந்து அதற்கு தகுந்த ஸ்டைலை உருவாக்குவது அவசியம். குறிப்பிட்ட வழியில் விளையாடும் வீரர்கள் ஒரே நாள் இரவில் அந்த மாற்றத்தைக் கொண்டு வர முடியாது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 5-வது நாள்தான் மிகவும் கடினமானது. ஏனெனில் போட்டி டிராவில் முடிவடையும் என்று எதிர்பார்த்தாலும் கடைசி சில மணி நேரங்கள் விக்கெட்டை விடாமல் விளையாட வேண்டும். அங்கே நாம் முடித்து விட்டு போகலாம் என்று நினைக்க முடியாது.

ஆனால் தற்போது அதிரடியாக விளையாடப்படுவதால் முடிவுகளில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. அது விளையாட்டுக்கு நல்லது என்று நான் நம்புகிறேன். இப்போது நிறைய வெற்றி முடிவுகள் வருவதை நான் மிகவும் விரும்புகிறேன். இப்போதெல்லாம் ஒரு சில நாட்கள் ஆட்டம் பாதிக்கப்பட்டாலும் வெற்றிக்காக விளையாடுகிறார்கள். அதுதான் டெஸ்ட் கிரிக்கெட்டின் அழகாகும்" என்று கூறினார்.

Read Entire Article