
கராச்சி,
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர் உள்பட சுற்றுலாவுக்காக சென்றிருந்த 26 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான 'தி ரெசிஸ்டண்ட் பிரண்ட்' பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவானது. இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நேற்றிரவு அதிரடி தாக்குதல் நடத்தியது. இதன்படி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை இலக்காக கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நடந்த இந்த துல்லிய தாக்குதலில், 9 பயங்கரவாத உட்கட்டமைப்புகள் இலக்காக கொள்ளப்பட்டன. இந்த தாக்குதலில் பயங்கரவாதிகளும் உயிரிழந்தனர். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து, அனைத்து வித விமான போக்குவரத்துக்கான தன்னுடைய வான்வெளியை பாகிஸ்தான் 48 மணிநேரத்திற்கு மூடியது.
இதன்படி, இஸ்லாமாபாத் மற்றும் லாகூர் வான்வெளி மூடப்பட்டதுடன், விமான போக்குவரத்து கராச்சிக்கு திருப்பி விடப்பட்டது. பாகிஸ்தான் விமான போக்குவரத்து அதிகாரிகள் இந்நடவடிக்கையை எடுத்ததும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒட்டுமொத்த வான்வெளியும் 48 மணிநேரத்திற்கு மூடப்பட்டது.
எனினும், 8 மணிநேரம் மூடப்பட்ட நிலையில், பாகிஸ்தான் விமான போக்குவரத்து அதிகாரிகள், வான்வெளியை மீண்டும் திறந்தனர். இதனை தொடர்ந்து, சர்வதேச மற்றும் உள்ளூர் விமான போக்குவரத்து இன்று காலை தொடங்கியது. அவற்றில் பல விமானங்கள் கராச்சியில் உள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அல்லது லாகூர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றன.
எனினும், லாகூர் விமான நிலையம் மீண்டும் 24 மணிநேரத்திற்கு மூடப்பட்டது. இதுபற்றி பாகிஸ்தான் விமான போக்குவரத்து துறையின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, மேற்காசிய நாடுகளை சேர்ந்த விமானங்கள் மற்றும் பிற பகுதிகளில் இருந்து வரக்கூடிய விமானங்கள் முழு அளவில், அட்டவணைப்படி இயங்குகின்றன என கூறினார்.
அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை உள்ளூர் விமானங்களும் செயல்பாட்டில் இருக்கும் என அவர் கூறியுள்ளார். இதன்படி, உஸ்பெகிஸ்தான் விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று தாஷ்கன்ட்டில் இருந்து புறப்பட்டு, லாகூர் வழியே புதுடெல்லிக்கு வந்தடைந்தது என கூறியுள்ளார்.