
சென்னை,
கடந்த 2018-ம் ஆண்டு வெளியான 'பரியேறும் பெருமாள்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இந்த திரைப்படம் மிகுந்த பாராட்டை பெற்றது. இதையடுத்து, தனுஷ் நடித்த 'கர்ணன்', உதயநிதி ஸ்டாலின் நடித்த 'மாமன்னன்', 'வாழை' உள்ளிட்ட படங்களை மாரி செல்வராஜ் இயக்கினார்.
இதைத் தொடர்ந்து நடிகர் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் 'பைசன்' படத்தை இயக்கியுள்ளார். அடுத்ததாக தனுஷின் டி56 என்ற படத்தை இயக்க உள்ளார்.
இந்த நிலையில், மாரி செல்வராஜ் நேற்று நடைபெற்ற 'மாமன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அந்த விழாவில் மாரி செல்வராஜ், பேசிய விஷயங்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அதாவது, "நடிகர் சூரி போன்ற ஒரு கதாநாயகன் தமிழ் சினிமாவிற்கு மிகவும் தேவை. வாழ்க்கையில் எதார்த்தமாக பயணிக்க கூடிய, மனிதர்கள் எல்லாம் எப்போது கதாநாயகர்களாக ஆவார்கள் என்று நான் பலமுறை யோசித்துள்ளேன். எனக்கும் சூரிக்கும் ஒரு விஷயம் ஒரே மாதிரி உள்ளது. அதாவது இருவரும் ஒரே வீட்டில் இருந்து வந்தது போன்ற உணர்வு எனக்கு உள்ளது. யாருமே நடிக்க மாட்டேன் என்று சொன்ன ஒரு கதையை எடுத்துக்கொண்டு சூரியிடம் சென்றால் கண்டிப்பாக அவர் நடித்துக் கொடுப்பார்" என்று தெரிவித்துள்ளார்.
