
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் 20ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியான நிலையில், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த 7ம் தேதி ரோகித் சர்மா அறிவித்தார்.
ரோகித்தை தொடர்ந்து விராட் கோலியும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். இதையடுத்து, எதிர்வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு புதிய கேப்டன், ரோகித் மற்றும் விராட் கோலிக்கு சரியான மாற்று வீரர்களை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு பி.சி.சி.ஐ வந்துள்ளது. பி.சி.சி.ஐ வட்டாரங்கள் அளித்த தகவலின் படி இந்திய டெஸ்ட் அணிக்கு சுப்மன் கில் கேப்டனாகவும், ரிஷப் பண்ட் துணை கேப்டனாகவும் நியமிக்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக பும்ராவை நியமிக்க வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, பும்ராவுக்கு பணிச்சுமை பிரச்சனை இருக்கிறதா? இல்லையா? என்பது அவரை விட வேறு யாருக்கு தெரியும். நீங்கள் வேறு ஒருவரை கேப்டனாக நியமித்தால் அவர் எப்போதும் பும்ராவிடம் எக்ஸ்ட்ரா ஓவரை வாங்க விரும்புவார்.
உங்களுடைய நம்பர் ஒன் பவுலராக இருக்கும் அவருக்கு எப்போது இடைவெளி எடுக்க வேண்டும் என்பது நன்றாகத் தெரியும். எனவே, என்னைப் பொறுத்த வரை அவர்தான் நம்முடைய கேப்டனாக இருக்க வேண்டும். பணிச்சுமை, காயம் போன்ற விஷயங்கள் அவரை சுற்றி இருப்பது எனக்கும் தெரியும். முதலில் அவருக்கு வாய்ப்பை கொடுங்கள். அப்போது தான் தாம் எவ்வளவு ஓவர்கள் பவுலிங் செய்ய வேண்டும் என்பது அவருக்கு தெரியும். இங்கிலாந்து தொடரில் முதல் போட்டி முடிந்த பின் 8 நாட்கள் இடைவெளி இருக்கிறது.
அதுவே 2 போட்டிகளுக்கு இடையே புத்துணர்ச்சி பெறுவதற்கு போதுமான நேரமாகும். அதன் பின் அடுத்தடுத்த போட்டிகள் நடைபெறுகிறது. அதில் எந்த பிரச்சனையும் இல்லாமல் அவரால் விளையாட முடியும். 4-வது போட்டிக்கு முன் மீண்டும் இடைவெளி இருக்கிறது. எனவே, அந்த நேரங்களை பயன்படுத்தி எவ்வளவு அதிகமாக பவுலிங் செய்ய முடியும் என்பது பும்ராவுக்கு மட்டுமே தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.