
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். இந்திய அணிக்காக கடந்த 2011-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆன அவர் 123 போட்டிகளில் விளையாடி அதில் 30 சதம் உட்பட 9,230 ரன்கள் குவித்துள்ளார்.
14 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிய விராட் கோலி படைத்துள்ள சாதனைகள் விவரம்:-
1. இந்திய அணிக்காக 68 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ள விராட் அதில் 40 போட்டிகளை வென்று கொடுத்து இந்திய அணிக்காக அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டன் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
2. இந்திய அணியை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்ற முதல் கேப்டன் என்ற மகத்தான சாதனைக்கு சொந்தக்காரர்.
3. டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக அதிக இரட்டை சதங்கள் (7 முறை) அடித்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர்.
4. ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய கேப்டன் இவர் ஆவார்.
5. டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக அதிக ரன்கள் குவித்தவர் விராட் கோலிதான்.
6. டெஸ்ட் வரலாற்றில் கேப்டனாக அதிக சதங்கள் அடித்த 2-வது வீரர் கோலி (20 சதங்கள்) ஆவார். இதில் தென் ஆப்பிரிக்காவின் சுமித் 25 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
7. டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் குவித்த 4-வது இந்திய வீரர் (9,230 ரன்கள்) விராட் கோலி ஆவார்.
8. ஆஸ்திரேலிய மண்ணில் அதிக டெஸ்ட் சதங்கள் அடித்த இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனைக்கு சொந்தக்காரர்.
9. ஐ.சி.சி. டெஸ் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் அதிக புள்ளிகள் பெற்ற இந்திய வீரர் என்ற பெருமைக்குரியவர்.
10. ஒரே வெளிநாட்டு டெஸ்ட் தொடரில் நான்கு சதங்களை அடித்த முதல் இந்தியர் விராட் கோலி ஆவார்.
இப்படி ஏராளமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆன விராட் கோலி தனது 14 ஆண்டு கால டெஸ்ட் பயணத்திற்கு இன்று விடை கொடுத்துள்ளார்.