![](https://media.dailythanthi.com/h-upload/2025/01/25/35771856-noman.webp)
முல்தான்,
பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 163 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக குடகேஷ் மோட்டி 55 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் நோமன் அலி ஹாட்ரிக் உள்பட 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் முதல் நாள் முடிவிலேயே 154 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 49 ரன்கள் அடித்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் வாரிக்கன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். வெஸ்ட் இண்டீஸ் 9 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள நிலையில் நாளை 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.
முன்னதாக இந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசின் முதல் இன்னிங்சின்போது 12-வது ஓவரை பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் நோமன் அலி வீசினார். அந்த ஓவரின் முதல் 3 பந்துகளில் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களான ஜஸ்டின் கிரேவ்ஸ், டெவின் இம்லாச் மற்றும் கெவின் சின்கிளேர் ஆகியோரின் விக்கெட்டுகளை வரிசையாக வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார்.
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தான் தரப்பில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் சுழற்பந்து வீச்சாளர் என்ற மாபெரும் சாதனையை நோமன் அலி படைத்துள்ளார்.