
காலே,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ் தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் டெஸ் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலே மைதானத்தில் கடந்த 6-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இலங்கை 257 ரன்களும், ஆஸ்திரேலியா 414 ரன்களும் எடுத்தன.
157 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 231 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. குசல் மென்டிஸ் 50 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் மேத்யூ குனேமேன், நாதன் லயன் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனையடுத்து 75 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணி 17.4 ஓவர்களில் இலக்கை எட்டிப்பிடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. உஸ்மான் கவாஜா 27 ரன்னுடனும், லபுஸ்சேன் 26 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி இலங்கையை ஒயிட்வாஷ் ஆக்கியது.
இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரான ஸ்டீவ் சுமித் பேட்டிங்கில் பல சாதனைகள் படைத்தார். அத்துடன் பீல்டிங்கிலும் மாபெரும் சாதனைகள் படைத்துள்ளார்.
அதன் விவரம் பின்வருமாறு:-
ஸ்டீவ் சுமித் இந்த போட்டியின் 2-வது இன்னிங்சில் 3 கேட்ச் செய்தார். இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது கேட்ச் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்தது.
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 200 கேட்சுகள் பிடித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் (விக்கெட் கீப்பரை தவிர்த்து) என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளார்.
ஒட்டு மொத்தத்தில் இந்த சாதனையை படைத்த 5-வது பீல்டர் சுமித் ஆவார். ஏற்கனவே ராகுல் டிராவிட், ஜோ ரூட், ஜெயவர்த்தனே மற்றும் ஜாக் காலிஸ் இந்த சாதனையை படைத்துள்ளனர்.