
பர்மிங்காம்,
இங்கிலாந்துக்கு சென்றுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் லீட்சில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 371 ரன்களை இலக்காக நிர்ணயித்த போதிலும் அதை இங்கிலாந்து அணி கடைசி நாளில் வெற்றிகரமாக விரட்டிப்பிடித்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இது பர்மிங்காம் மைதானத்தில் இந்திய அணி பெற்ற முதல் டெஸ்ட் வெற்றி இதுவாகும். இதற்கு முன்னர் இங்கு விளையாடிய 8 டெஸ்டில் ஆடி 7-ல் தோல்வியும் ஒன்றில் டிராவும் கண்டிருந்தது. இந்த வெற்றியின் மூலம் அந்த 58 ஆண்டு கால சோகத்திற்கு சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த மைதானத்தில் வெற்றி பெற்ற முதல் ஆசிய என்ற வரலாற்று சாதனையையும் படைத்துள்ளது. இதற்கு முன்பு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கு 8 டெஸ்டில் விளையாடியும் வெற்றி பக்கம் (5 தோல்வி, 3 டிரா) சென்றதில்லை. மற்றொரு ஆசிய அணியான இலங்கை இரு டெஸ்டில் ஆடி இரண்டிலும் தோல்வியை தழுவியுள்ளது குறிப்பிடதக்கது.