
காந்திநகர்,
ஆசிய சிங்கங்கள் குஜராத்தின் கிர் காடுகளில் மட்டுமே காணப்படும். தற்போது கிர் தேசிய பூங்காவுக்கு வெளியேயும், காடுகள் அல்லாத மற்றும் கடலோர பகுதிகள் உள்பட குஜராத்தின் 11 மாவட்டங்களிலும் இந்த சிங்கங்கள் பரவி உள்ளன.
குஜராத் மாநில வனத்துறையால் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சிங்க கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அதன்படி 6-வது ஆசிய சிங்க கணக்கெடுப்பு கடந்த 10-ந்தேதி தொடங்கி நடைபெற்றது. 3 ஆயிரம் தன்னார்வலர்கள் உதவியுடன் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதுகுறித்து வன தலைமை பாதுகாவலர் ஜெய்பால் சிங் கூறியதாவது:-
ஆசிய சிங்கங்கள் கடந்த 5 ஆண்டுகளில் 217 அதிகரித்து உள்ளன. மொத்த ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை 891 ஆக அதிகரித்துள்ளது. கிர் தேசிய பூங்கா மற்றும் வனவிலங்கு சரணாலயத்தில் மட்டும் 384 சிங்கங்கள் காணப்பட்டன. எல்லைக்கு வெளியே 507 சிங்கங்கள் காணப்பட்டன. இதில் 196 ஆண் சிங்கங்கள், 330 பெண் சிங்கங்கள், 140 இளம் சிங்கங்கள், 225 சிங்கக்குட்டிகள் அடங்கும்.
கடைசியாக 2020-ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 674 சிங்கங்கள் இருந்தன. போர்பந்தரில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள பர்தா சரணாலயத்தில் 17 சிங்கங்கள் உள்ளன. சிங்கங்களை அடையாளம் காண உயர் தெளிவுத்திறன் கொண்ட கேமராக்கள் மற்றும் ரேடியோ காலர்கள் போன்ற உயர் தொழில்நுட்ப கருவிகள் பயன்படுத்தப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.