
புதுடெல்லி,
பெல்ஜியம் நாட்டு இளவரசி ஆஸ்திரித் 300 உறுப்பினர்களை கொண்ட பொருளாதார குழுவினருடன் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இந்த குழு, பெல்ஜியம் மற்றும் நட்பு நாடுகளுடனான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்த பங்காற்றும்.
இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் மற்றும் இளவரசி ஆஸ்திரித்தின் சந்திப்பு கடந்த திங்கட்கிழமை நடந்தது. அவருடைய வருகை இந்தியா-பெல்ஜியம் மற்றும் இந்தியா-ஐரோப்பிய ஒன்றியத்தின் வலுவான நட்புறவுக்கான பெரிய ஒருங்கிணைப்புகளை வளர்த்தெடுக்கும் என நம்பிக்கை வெளியிட்டார்.
அரசர் ஆல்பர்ட் 2-வின் 2-வது மகளான ஆஸ்திரித், அரசரின் பிரதிநிதியாக பெல்ஜியம் நாட்டின் பொருளாதார குழுவை முன்னின்று வழிநடத்துகிறார். இந்த சூழலில், பிரதமர் மோடியை அவர் நேற்று சந்தித்து பேசினார். இதுபற்றி எக்ஸ் சமூக ஊடகத்தில் குறிப்பிட்ட பிரதமர் மோடி, பெல்ஜியம் நாட்டு இளவரசியை சந்தித்ததில் மகிழ்ச்சி.
இந்தியாவுக்கு பொருளாதார குழுவினரை வழிநடத்தியுள்ள அவருடைய தன்முனைப்பை ஆழ்ந்து பாராட்டுகிறேன். வர்த்தகம், தொழில் நுட்பம், பாதுகாப்பு, வேளாண்மை, வாழ்க்கை சார்ந்த அறிவியல், புதிய கண்டுபிடிப்பு, திறமை மற்றும் கல்வி சார்ந்த சவால்கள் போன்றவற்றில் புதிய நட்புறவுகளின் வழியே நம்முடைய மக்களுக்கு எல்லையில்லா வாய்ப்புகளை ஏற்படுத்தி தர, எதிர்பார்த்து இருக்கிறேன் என பதிவிட்டு உள்ளார்.
இளவரசி வழிநடத்தும் குழுவானது, இரு நாடுகளுக்கு இடையே இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டில் ஒத்துழைப்பு ஆகியவற்றை வலுப்படுத்தும் நோக்கம் கொண்டது.
இதற்கு முன் பெல்ஜியம் இளவரசி, 800 பேருடன் நடந்த விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, இந்திய கலைஞர்களுடன் நடனம் ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். நீர் மற்றும் கழிவு மேலாண்மை தொடர்பான மாநாடு ஒன்றிலும் அவர் பங்கேற்றார்.