
சென்னை,
தமிழகத்தில் 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போது ஆளுங்கட்சியான அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா. மற்றும் 5 சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஆனால், தேர்தலில் இந்த கூட்டணியால் 75 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. குறிப்பாக, அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் பலர் தோல்வி அடைந்தனர்.
'தோல்விக்கு பா.ஜ.க.வுடனான கூட்டணிதான் காரணம்' என்று முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் வெளிப்படையாகவே குற்றம்சாட்டினர். அது தொடர்பாக, பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையுடன் வார்த்தைப் போர் முற்றவே, பா.ஜ.க. - அ.தி.மு.க. இடையேயான கூட்டணி உடைந்து போனது. தொடர்ந்து 2024-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., தே.மு.தி.க. உள்பட சில கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி வைத்திருந்தது. ஒரு இடத்தில்கூட வெற்றியை பெற முடியவில்லை.
ஏற்கனவே, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் விலக்கப்பட்டனர். இதனால், அவர்கள் தனித்தனி அணியாக செயல்பட்டு வரும் நிலையில், 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை அ.தி.மு.க. எப்படி எதிர்கொள்ளப்போகிறது? என்ற கேள்வி எழுந்துள்ளது.
வலுவான கூட்டணியுடன் ஆளுங்கட்சியான தி.மு.க. களம் இறங்க இருக்கும் அதே வேளையில், தமிழக வெற்றிக் கழக தலைவரான நடிகர் விஜய்யும் தேர்தலில் அடியெடுத்து வைப்பதால், அ.தி.மு.க.வுக்கும் வலுவான கூட்டணியை அமைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
தேர்தலுக்கு இன்னும் 13 மாதங்களே இருப்பதால், அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்க வேண்டிய கடமை அ.தி.மு.க.வுக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, அ.தி.மு.க.வுக்குள் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்பட ஒரு சிலர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த மாதம் சிவராத்திரி அன்று கோவை வந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சந்தித்து பேசியதாக பரபரப்பாக பேசப்படுகிறது. நேற்று முன்தினம் அவரது மகன் திருமண விழாவில் பா.ஜ.க.வை சேர்ந்த மத்திய இணை மந்திரி எல்.முருகன், மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது, அண்ணாமலையுடன் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் எழுந்து நின்று கைகுலுக்கி பேசியதும் சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆகி உள்ளது.
எதிர்வரும் சட்டசபை தேர்தலுக்கு வலுவான கூட்டணியை அமைக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருதினாலும் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரை கட்சியில் சேர்க்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். ஆனால், அ.தி.மு.க. நிர்வாகிகள் பலரும், தொண்டர்களும் அ.தி.மு.க. ஒன்றிணைவதுடன், வலுவான கூட்டணியை அமைத்தால் மட்டுமே தி.மு.க.வை வெல்ல முடியும் என்று கருதுகின்றனர்.
இந்த நிலையில், நேற்று சேலம் மாவட்டம் ஆத்தூரில் பேட்டியளித்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 'எங்களுக்கு ஒரே எதிரி தி.மு.க.தான். அதை வீழ்த்துவதுதான் நோக்கம்' என்றார். மேலும், பா.ஜ.க.வுடன் மீண்டும் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்விக்கு, 'இன்னும் 6 மாதம் கழிக்கட்டும்' என்று கூறினார்.
அதாவது, பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாக அவர் மறுக்கவில்லை. அப்படி என்றால், அ.தி.மு.க. நிர்வாகிகள் தங்கள் மனநிலையை அவரிடம் தெரிவித்துவிட்டதாகவே தெரிகிறது. எனவே, தேர்தல் நாள் நெருங்க.. நெருங்க.. அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையேயான நெருக்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தனித்து போட்டியிடும் ஒருசில கட்சிகளையும் இந்த கூட்டணி வளையத்துக்குள் கொண்டுவர பா.ஜ.க. முயற்சி மேற்கொள்ளும் என்றும் கூறப்படுகிறது.