
புதுடெல்லி,
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 4 நாள் பயணமாக நேற்று முன்தினம் மாலை டெல்லி சென்றார். அவருடன் கவர்னரின் தனி செயலாளர், உதவியாளர், பாதுகாப்பு அதிகாரி ஆகியோரும் சென்றுள்ளனர். டெல்லியில் தமிழக அரசின் பொதிகை இல்லத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி தங்கியிருக்கிறார்.
இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) அவர் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுபோல உள்துறை மந்திரி அமித்ஷா அல்லது உயர் அதிகாரிகளையும் அவர் சந்திக்கலாம் என தெரிகிறது.
நிலுவையில் உள்ள மசோதாக்கள் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு கவர்னருக்கு பாதகமாக அமைந்து இருக்கிறது. இதனை துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் விமர்சித்து இருந்தார். இந்த நிலையில் துணை ஜனாதிபதியை கவர்னர் சந்திக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.