
டெல்லி,
வங்காளதேசம், மியான்மர் நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழையும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்தியாவுக்குள் குடும்பமாக நுழையும் நபர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாற்று பெயர் மற்றும் அடையாள அட்டையுடன் சட்டவிரோதமாக வசித்து வருகின்றனர். அந்த நபர்களை கைது செய்ய மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக வசித்துவருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் கடந்த சில நாட்களாக டெல்லியின் நரிலா தொழிற்பேட்டை பகுதியில் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது, அப்பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி வசித்து வந்த வங்காளதேசத்தினர் 121 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் விரைவில் வங்காளதேசத்திற்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல், வங்காளதேசத்தினர் சட்டவிரோதமாக தங்க உதவியதாக 5 இந்தியர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.