டெல்லியில் காற்றுமாசு காரணமாக 3 மணி நேரத்துக்கும் மேல் விமானம் தாமதமானால் ரத்து செய்ய உத்தரவு

1 month ago 4

புதுடெல்லி: டெல்லியில் காற்றுமாசு காரணமாக விமானங்கள் இயக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 3 மணி நேரத்துக்கு மேல் தாமதமானால் விமானத்தை ரத்து செய்ய ஒன்றிய அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. சரிந்து வரும் வெப்பநிலை, அடர் புகை மூட்டம் காரணமாக சாலைகளிலேயே இரவு முதல் நண்பகல் வரை பல இடங்கள் தெரிவதில்லை. இதனிடையே, டெல்லி விமான நிலையத்தில் இருந்து விமானங்களை இயக்குவது கடும் சவால் நிறைந்த பணியாக மாறியுள்ளது. இதுவரை நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தலைமையில் உயர்நிலை கூட்டம் நேற்றிரவு நடந்தது. இதில் விமான போக்குவரத்து சம்பந்தப்பட்ட துறைகளின் உயர் அதிகாரிகள், வானிலை மைய அதிகாரிகள், விமான நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த அறிக்கையை ஒன்றிய அமைச்சகம் வெளியிட்டது. விமான தாமதங்கள் குறித்து பயணிகளுக்கு முன்கூட்டியே தெரிவிக்குமாறும், பயண இடையூறுகளை குறைக்க செக்-இன் கவுன்டர்களில் அதிகளவிலான பணியாளர்கள் இருப்பதை உறுதி செய்யுமாறும் விமான நிறுவனங்களிடம் கேட்டு கொள்ளப்பட்டது. மேலும், 3 மணிநேரத்துக்கு மேல் விமானத்தை இயக்குவதில் தாமதம் ஏற்பட்டால், விமானத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

The post டெல்லியில் காற்றுமாசு காரணமாக 3 மணி நேரத்துக்கும் மேல் விமானம் தாமதமானால் ரத்து செய்ய உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article