புதுடெல்லி: டெல்லியில் இன்று காலை 10 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் 10வது நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். கர்நாடகா முதல்வர் உள்ளிட்ட 5 மாநில முதல்வர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. நாடு முழுவதும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்திடும் வகையில் அதன் அமைப்பாக ஒன்றிய திட்டக்குழு என்பது செயல்பட்டு வந்தது.
ஆனால் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2014ம் ஆண்டு ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பின்னர் திட்டக்குழு என்பது முழுமையாக கலைக்கப்பட்டு அதற்கு பதிலாக நிதி ஆயோக் என்ற அமைப்பு புதியதாக உருவாக்கப்பட்டு தற்போது வரையில் அது செயல்பட்டு வருகிறது. நிதி ஆயோக்கின் 9வது கூட்டம் கடந்த ஆண்டு 2024 ஜூலை 27ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. அப்போது தமிழக முதல்வர் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்கள் கூட்டத்தை புறக்கணித்தனர்.
இந்நிலையில் 10வது நிதி ஆயோக் கூட்டம் இன்று (24ம் தேதி) டெல்லியில் பாரத் மண்டபத்தில் காலை 10 மணிக்கு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள நாட்டில் உள்ள அனைத்து மாநில முதல்வர்களுக்கும் பிரதமர் அலுவலகத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, கூட்டத்தில் நிதி ஆயோக்கின் துணைத்தலைவர் ஸ்ரீசுமன் பெர்ரி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உட்பட முக்கிய ஒன்றிய அமைச்சர்களும், அதேப்போன்று தமிழ்நாடு, ஆந்திரா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாடு தரப்பில் இருந்து மாநில முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
இதில் நேற்று நடந்த நிதி ஆயோக் கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக அதில் கலந்து கொண்ட அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஒன்றாக நின்று குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதைத்தொடர்ந்து காலை சுமார் 10 மணியளவில் தொடங்கிய நிதி ஆயோக்கின் 10வது கூட்டம் மதியம் 1 மணி வரையில் ஒரு பகுதியாகவும், அதேபோன்று பிற்பகல் 2 மணியில் இருந்து மாலை 4 மணி வரை என்று இரண்டு கட்டமாக நடைபெற்றது. டெல்லியில் இன்று நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் நடத்தப்பட்ட முக்கிய ஆலோசனையில், “மாற்றுப்பயிர்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்புவகைகள் மற்றும் வேளாண் சமூகங்களின் தன்னிறைவை எட்டுதல், குறிப்பாக தேசிய கல்விக் கொள்கையில் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியின் அமலாக்கம், நகர்ப்புற நிர்வாகம் உள்ளிட்ட முக்கிய ஆலோசனைகள் விவாதிக்கப்பட்டது.
குறிப்பாக அடுத்த 15 ஆண்டுகளுக்கான நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி திட்டம், பொருளாதார வளர்ச்சி, மக்களின் வாழ்வாதாரம், நாடு முழுவதும் சிறு குறு தொழிலை எப்படி ஊக்கப்படுத்துவது, பணவீக்கத்தை எவ்வாறு சரி செய்து ஜிடிபியை அதிகப்படுத்துவது என்பது உட்பட பல்வேறு ஆக்கப்பூர்வமான பல முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதேப்போன்று வரும் காலத்தில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பதை எப்படி திட்டமிட்டு நடத்துவது ஆகியவை குறித்தும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து மாநில முதல்வர்களுடன் முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேப்போன்று சில அரசியல் ஆலோசனைகள் மற்றும் முடிவுகளையும் கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசித்துள்ளார். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் முக்கிய அறிவிப்புகள் இன்று மாலை நிதி ஆயோக் கூட்டம் முடிந்ததும் வெளியாக வாய்ப்புள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து மாநில முதல்வர்களையும் பேச அனுமதிக்கப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ஒன்றிய அரசு தமிழகத்துக்கு நியாயமாக தர வேண்டிய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார்.
நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, புதுவை முதல்வர் என்.ரங்கசாமி, கேரளா முதல்வர் பினராயி விஜயன், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஆகியோர் பங்கேற்கவில்லை. இதில் கர்நாடக முதல்வர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் பங்கேற்கவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக நிதி ஆயோக் கூட்டத்தை பொருத்தமட்டில் மாநில முதல்வர்களை தவிர, அவர்களது பரிந்துரையின் பேரில் யாரும் கலந்து கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
The post டெல்லியில் இன்று காலை 10 மணிக்கு பிரதமர் தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட்டத்தில் பங்கேற்று தமிழகத்திற்கான நிதியை விடுவிக்க வலியுறுத்தினார் appeared first on Dinakaran.