இறைச்சட்டத்தின் முன்…

4 hours ago 3

சட்டத்தின் ஆட்சியையும் நீதிமன்றத்தையும்விட குடியரசுத் தலைவர் உயர்ந்தவரா? இஸ்லாமிய வரலாறு ஒரு சுவையான நிகழ்வின் மூலம் இதற்கு விடை அளிக்கிறது.கலீஃபா- இஸ்லாமியக் குடியரசின் தலைவராக இருந்தவர் அலீ(ரலி) அவர்கள். அவருக்குச் சொந்தமான விலை உயர்ந்த இரும்புக் கவசம் காணாமல் போய்விட்டது.போர்க்களம் செல்லும்போது அணிந்துகொள்ளும் இரும்புக் கவசம் அது. குடியரசுத் தலைவர் அதை மிகவும் கவனமாகப் பாதுகாத்துப் பராமரித்து வந்தார். எப்படியோ காணாமல் போய்விட்டது.ஒரு நாள் கூபா நகரத்துச் சந்தையில் ஒரு யூதனின் கையில் அந்த இரும்புக் கவசம் இருப்பதைப் பார்த்தார் குடியரசுத் தலைவர் அலீ(ரலி). அதை விற்பதற்காக சந்தைக்குக் கொண்டு வந்திருந்தான் அந்த யூதன்.பார்த்தவுடனே அலீ(ரலி) அவர்களுக்குத் தெரிந்து விட்டது, அது தம்முடைய இரும்புக் கவசம்தான் என்று. அந்த யூதனிடம் சென்று அடையாளங்களைச் சொல்லி, தம்முடைய அந்த இரும்புக் கவசத்தைத் திருப்பித் தரும்படி கேட்டார்.

யூதன் மறுத்தான். அது தன்னுடையது என்று சாதித்தான். அலீ(ரலி) தம்முடையது என்று வாதிட்டார். யூதன் “நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பேன்” என்றான். சொன்னது போல் குடியரசுத் தலைவருக்கு எதிராகக் கூபா நீதிமன்றத்தில் யூதன் வழக்குத் தொடுத்தான்.நீதியரசர் ஷுரைஹ் அவர்கள். வரலாற்றில் புகழ்பெற்ற நீதியரசர்களில் ஒருவர். சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதில் சற்றும் தயக்கம் காட்டாதவர். நீதியரசர் ஷுரைஹ் முன் வழக்கு வந்தது.
வழக்கு தொடுத்தவன், நாட்டில் வாழும் சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த ஒரு சாதாரண யூதன். யார் மீது வழக்கு? நாட்டின் குடியரசுத் தலைவர் மீது.“கலீஃபா அவர்களே, நீங்கள் நேர்மையாளர் என்பதை நான் அறிவேன். ஆயினும் நீதிமன்றம், வழக்கு என்று வந்துவிட்டால் சாட்சியங்களும் ஆதாரங்களும்தான் தேவை. இந்த இரும்புக் கவசம் இப்போது யூதனின் கையில். ஆகவே, அது உங்களுடையதுதான் என்பதற்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா?”- நீதியரசர்கேட்டார்.“சாட்சிகள் இருக்கிறார்கள்” என்றார் குடியரசுத் தலைவர்.“யார்?”

“ என் மகன் ஹஸனும் என் பணியாளர் ஒருவரும்.”“இரண்டாவது சாட்சியத்தை ஏற்கிறேன். ஆனால் முதல் சாட்சியத்தை ஏற்க முடியாது.”“என் மகன் ஹஸன் இறைத்தூதரின் பேரன். சுவனத்து இளைஞர்களின் தலைவர் என்று நபிகளாரால் போற்றப்பட்டவர். அவருடைய சாட்சியத்தை ஏற்க மாட்டீர்களா?”“உங்கள் மகனின் சிறப்புகள் குறித்து நானும் அறிவேன். அவற்றில் எதையும் மறுக்கவில்லை. ஆனால், தந்தையின் வழக்கில் மகனின் சாட்சியத்தை ஏற்பதற்கில்லை. அதுதான் சட்டம். ஆகவே, வேறு சாட்சியங்கள் உண்டா?”குடியரசுத் தலைவர், “வேறு சாட்சியங்கள் இல்லை” என்றார். இரும்புக் கவசம் யூதனுக்கே சொந்தம் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.நடந்ததை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த யூதன் வியப்பின் எல்லைக்கே போய்விட்டான். இறைச்சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனும் இஸ்லாத்தின் நீதிமுறை அவன் இதயத்தைக் கவர்ந்தது.மதம் கடந்து, பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் இஸ்லாமியச் சட்டம் அவருக்குத் துணை இருக்கும் என்பதை நேரடியாக அறிந்து கொண்டான், அந்த யூதன். நீதிமன்றத்தில் உண்மையை ஒப்புக் கொண்டான்.இந்தக் கவசத்தை ஜனாதிபதியிடமிருந்து திருடியதாகவும் அது அவருடைய கவசம்தான் என்றும் கூறி இரும்புக் கவசத்தை நீதிமன்றத்தில் ஒப்படைத்தான். தன் இதயத்தை இஸ்லாத்திடம் ஒப்படைத்தான்.
– சிராஜுல் ஹஸன்.

The post இறைச்சட்டத்தின் முன்… appeared first on Dinakaran.

Read Entire Article