
புதுடெல்லி,
70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பா.ஜனதா, ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன.
இருந்தாலும் பா.ஜனதா, ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் என மும்முனைப்போட்டி நிலவியது. தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் இருந்தாலும் டெல்லி மாநில தேர்தலில் ஆம் ஆத்மி தனியாக களத்தை சந்தித்தது. களத்தில் காங்கிரஸ் கட்சியும், ஆம் ஆத்மியும் பரம எதிரிகள்போல் மோதின. பா.ஜனதாவை பொறுத்தவரை கால் நூற்றாண்டுகளுக்கு பின்னர் மீண்டும் டெல்லியைகைப்பற்ற வேண்டும் என்ற உத்வேகத்துடன் இந்த தேர்தலை சந்தித்தது.பதிவான வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டு முடிவு நேற்று வெளியானது. இதில் 48 இடங்களில் அமோக வெற்றி பெற்று, 27 ஆண்டு களுக்குப் பிறகு மீண்டும் பா.ஜனதா ஆட்சியை பிடித்தது. 22 இடங்களை மட்டுமே பிடித்து முன்னாள் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி அடைந்தார். கடந்த 2 முறை பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கட்டிலில் இருந்த ஆம் ஆத்மி கட்சி, தற்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர உள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் பெரும் பின்னடைவை சந்தித்தது.
இந்தநிலையில் ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் பிரியங்கா கக்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
கடந்த 10 ஆண்டுகளாக டெல்லி மக்கள் அளித்த ஆதரவிற்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருப்போம். மக்களின் தீர்ப்பை நாங்கள் தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறோம். மேலும் பாஜக மக்களுக்காக பாடுபடும் என்று நம்புகிறோம். டெல்லியில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக ஆம் ஆத்மி செயல்படும். ஆம் ஆத்மி கட்சி தனது தவறுகளைப் புரிந்துகொண்டு, அங்கீகரித்து, செயல்படும் ஒரு கட்சியாகும். தனது தவறுகளைப் புரிந்துகொண்டு, அங்கீகரித்து, செயல்படும் ஒரு கட்சி ஆம் ஆத்மி ஆகும். வாக்கு சதவீதம் குறைந்ததற்கான காரணத்தை நாங்கள் நிச்சயமாக ஆராய்வோம். டெல்லி மக்களுக்கு பாஜக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நாங்கள் பொறுப்பேற்க செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.