
புதுடெல்லி,
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் தாக்குதல் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.
இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்த நிலையில், எல்லையில் அத்துமீறி இந்திய பகுதிகளை குறிவைத்து கடந்த சில தினங்களாக பாகிஸ்தான் தாக்க முயற்சித்தது.
இந்த தாக்குதல் முயற்சிகளை இந்திய ராணுவம் தொடர்ந்து முறியடித்து வந்தது. இந்த நிலையில், தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று அறிவித்தார்.
இதை இந்திய அரசும், பாகிஸ்தான் அரசும் உறுதி செய்தன. ஆனால் நேற்று இரவு போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக முறியடித்தது.
இதற்கிடையே எல்லை மாநிலங்கள் மற்றும் டெல்லியை ஒட்டிய அண்டை மாநிலங்களில் அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
குறிப்பாக டெல்லியில் இதுதொடர்பான நடவடிக்கைகளுக்காக முதல்-மந்திரி ரேகா குப்தா ஒரு ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். அதில் மருத்துவமனைகளில் மருந்து மாத்திரைகளை போதிய அளவில் இருப்பு வைப்பது, பணியாளர் பற்றாக்குறை இல்லாமல் பார்த்துக் கொள்வது, மின்தடை ஏற்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் ஏற்படுத்துவது, அவசரகால தங்குமிடங்கள் தயார் செய்வது போன்ற அவசரகால ஏற்பாடுகளை செய்யுமாறு அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார்.