‘‘கட்சிக்காரங்களோடு கைகோர்த்துக்கிட்டு கண்துடைப்பு ஆய்வு நடத்துகிறாராமே பெண் அதிகாரி தெரியுமா..’’ எனக்கேட்டபடியே வந்தார் பீட்டர் மாமா. ‘‘மான்செஸ்டர் மாவட்டத்துல கனிமங்களை கண்காணிக்கும் பெண் அதிகாரி இலை கட்சி, பூ கட்சி ஆட்களோடு கைகோர்த்துக்கொண்டு செயல்படுவதாக புகார் எழுந்திருக்கு.. மான்செஸ்டர் மாவட்டத்துல செயல்பாட்டில இருக்கிற கல்குவாரிகளில் 90 சதவீதம் இலை மற்றும் பூ கட்சி ஆட்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதாம்.. இந்த கல்குவாரிகளில் ஆய்வு என்பது வெறும் கண்துடைப்புதானாம்.. ஆய்வின்போது சட்டமீறல் இருந்தாலும் கண்டுகொள்வதில்லையாம்.. காரணம், அதிகாரிக்கு தேவையானதை மாதந்தோறும் கவனித்து விடுவதால் அவர்களது மனம் நோகாதபடி நடந்துக்கிறாராம்.. இப்படியே போனா அதிகாரியோட செயல்பாடு அரசுக்குத்தான் கெட்ட பெயரை உருவாக்கும்னு சொல்றாங்க..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மீண்டும் பலாப்பழக்காரர் கட்சியில் இணைந்தால் கை ஓங்கிடும் என்ற மகிழ்ச்சியில் இருந்த அவரது ஆதரவாளர்கள் சேலத்துக்காரர் தலையில் மண்ணை அள்ளிபோட்டு விட்டாரே என புலம்புறாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘பலாப்பழக்காரர், சின்ன மம்மி மற்றும் குக்கர்காரர் உள்ளிட்டோர், இலைக்கட்சியில் இருந்து பிரிந்திருக்கும் அனைத்து தரப்பினரும் விரைவில் ஒன்று சேருவார்கள் என கூறி வந்தாங்க.. இவர்களுக்கு ஆதரவா கோட்டையானவரும் கம்பு சுற்றினார். இணைப்பு சாத்தியமானால், ஹனிபீ மாவட்டத்தில் மீண்டும் பலாப்பழக்காரரின் கை ஓங்கிவிடும் என்ற மகிழ்ச்சியில் அவரது ஆதரவாளர்களும், வருத்தத்தில் இலைத்தரப்பினரும் இருந்தாங்க.. இந்த பரபரப்பான சூழ்நிலையில் சேலத்துக்காரர், தலைநகருக்கு போய் முக்கியமானவரை சந்தித்து திரும்பி இருக்காரு.. அப்போது, நீக்கியவர்களை மீண்டும் சேர்க்க வாய்ப்பில்லை என தனக்கு நெருக்கமான சிலரிடம் கூறியுள்ளாராம்… இதனை கேட்ட பலாப்பழக்காரர் மட்டுமின்றி, அவரது ஆதரவாளர்களும் ரொம்ப அதிர்ச்சியடைந்துள்ளனர். இலைக்கட்சியில் ஒன்றிணைந்ததும் கட்சியில் மீண்டும் அதிகார இடத்திற்கு போய்விடலாம் என்ற தங்களது நினைப்பில், சேலத்துக்காரர் மண்ணை அள்ளி போட்டு விட்டாரே என புலம்பி வருகின்றனர். குறிப்பாக ஹனிபீ மாவட்ட பலாப்பழக்காரர் தரப்பினர் தங்களின் எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற கவலையில் உள்ளனராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலை கட்சியில் யார் பெரிய ஆளு என்பதை நிரூபிக்க டெல்டாவில் போட்டா போட்டி நடக்கிறதாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘டெல்டாவில் இலை கட்சியில் யார் பெரிய ஆளு என்பதை நிரூபிக்க இலை கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இரண்டு பேருக்கு இடையே போட்டா போட்டி நிலவி வருகிறதாம்.. ஒருவர் கொங்கு மண்டலத்தில் உள்ள முக்கிய நிர்வாகியுடன் தொடர்பில் இருந்து வருகிறாராம்.. மற்றொரு நபர், பவர் புல்லாக இருக்கும் நபருடன் இருக்கிறாராம்.. இதில், யார் பெரிய ஆளு என்பது தான், இவர்கள் இருவருக்கும் இடையே நடந்து வரும் போட்டியாக உள்ளதாம்.. இருவருக்கும் நடந்து வரும் பனிப்போர் மோதல் குறித்து, தலைமைக்கு தெரிந்தும் பெரிதாக ரியாக்ஷன் காட்டவில்லையாம்.. இலை கட்சியின் தொண்டர்களை தங்கள் பக்கம் இழுக்கும் வேலையில் இருவரும் இறங்கியுள்ளார்களாம்.. இதன் மூலம் தான் சொல்வதை கேட்டு தான் ஆக வேண்டும் என்ற நிலையை உருவாக்க இருவரும் முடிவு செய்துள்ளார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘டெல்லிக்கு சென்று வந்த இலைக்கட்சி தலைவரின் மகிழ்ச்சிக்கு என்ன காரணமாம்..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சி தலைவரு டெல்லிக்கு போயிட்டு வந்ததிலிருந்து ரொம்பவே ஹேப்பியா இருக்காராம்.. தன்னுடன் சேர்ந்த மாஜிக்களின் ஊழல் பைல்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டோமுன்னு உறுதியாக சொன்னாங்களாம்.. இதுதான் அந்த ஹேப்பிக்கு காரணமாம்.. அதோடு இலைக்கட்சிக்கு இன்னும் சில மாதங்களில் ரெண்டு எம்.பி. பதவி வரப்போகுதாம்.. இதில் ஒன்றை தனது மகனுக்கு கொடுக்கப் போவதாக கட்சிக்காரங்க சொல்றாங்க.. டெல்லியை பொறுத்தவரையில் இலைக்கட்சி தலைவருக்கு விசுவாசமான ஆட்கள் இல்லையாம்.. இதனால டெல்லியில் என்ன நடக்குதுன்னு தெரியாம தவிக்கிறாராம்.. தனது மகனுக்கு பதவி கொடுப்பதன் மூலம், டெல்லியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திடலாமுன்னு திட்டம் வச்சிருக்காராம்.. இதற்கு டெல்லியின் சம்மதத்தையும் வாங்கிட்டு வந்துட்டாராம் இலைக்கட்சி தலைவர். அப்படின்னா இன்னொரு பதவி யாருக்காம் என்ற கேள்வி எழுந்திருக்கு.. இதற்கும் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் டவல் போட்டு வச்சிருக்காராம்.. கட்சியின் ரெண்டு தலைவர்களுடன் பணியாற்றிய அவர் மாங்கனி நகரை சேர்ந்தவராம்.. அவர் பார்க்காத பதவியே இல்லையாம்.. என்றாலும் அந்த பதவி தனக்கு கிடைத்தால் நாடாளுமன்றத்தில் இலைக்கட்சியின் கொடியை தூக்கிப்பிடிப்பேன்னு சொல்றாராம்.. நான் எம்பியாக இருந்தபோது, செய்த சாதனைகள் என்று பட்டியலிட்டுக்கிட்டே அவரது அடிப்பொடிகளின் காதினில் தேனை பாய்ச்சுறாராம்.. அவர்களும் உங்களை விட்டால் வேறுயாரும் அந்த பதவிக்கு பொருத்தமாக இருக்கமாட்டார்கள் என அவரை உசுப்பேத்துறாங்களாம்.. ஆனால் இலைக்கட்சி தலைவரை நன்கு தெரிந்தவர்கள் இதெல்லாம் நடக்காதுன்னு சொல்றாங்க.. என்றாலும் இம்முறை தனக்கு அந்த வாய்ப்பு கிடைக்குமுன்னு காத்திருக்கிறாராம் அந்த சிவந்த மலைக்காரர்..’’ என்றார் விக்கியானந்தா.
The post டெல்லிக்கு போயிட்டு வந்ததில் இருந்து இலைக்கட்சி தலைவர் ரொம்ப ஹேப்பியாக இருப்பதுபற்றி சொல்கிறார் : wiki யானந்தா appeared first on Dinakaran.